Last Updated:
கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொகையை கடன் வாங்க அனுமதிக்கிறது.
மருத்துவச் செலவுகள், வீட்டுப் பராமரிப்பு அல்லது தொலைதூரப் பயணம் போன்ற எதிர்பாராத காரணங்களுக்காக அவசரமாகப் பணம் தேவைப்படும்போது, பெரும்பாலான மக்கள் கிரெடிட் கார்டு அல்லது தனிநபர் கடனைத் தேடிச் செல்கின்றனர். இரண்டுமே உங்களுக்கு ஒரு சிறிய தொகையைப் பெற்றுத் தரும் என்றாலும், வெவ்வேறு செலவுகள், நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. உங்கள் அவசரச் செலவுகளுக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைக் தெரிந்துகொள்வதன் மூலம் உங்கள் பணத்தை மிச்சப்படுத்த முடிவதோடு தேவையற்ற மன அழுத்தத்தையும் தவிர்க்கலாம்.
வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC) தனிநபர் கடனை வழங்குகிறது. இவர்களிடம் வாங்கும் கடனிற்கு குறிப்பிட்ட காலத்திற்கு, அதாவது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாதாந்திர தவணைகளாக பணத்தைத் திருப்பிச் செலுத்துகிறீர்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து, வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 10% முதல் 24% வரை இருக்கும்.
திருமணம், கல்லூரி அல்லது அவசர மருத்துவச் செலவுகள் போன்ற அதிக பணத் தேவைகளுக்கு தனிநபர் கடன்கள் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் அவை கண்டிப்பான திருப்பிச் செலுத்தும் திட்டத்தை அனுமதிப்பதோடு கிரெடிட் கார்டு பில்களை விடக் குறைவான வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் விண்ணப்ப செயல்முறை பெரும்பாலான பிற கடன்களை விட வேகமாக இருந்தாலும், பணம் வழங்க பல நாட்கள் ஆகும்.
கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொகையை கடன் வாங்க அனுமதிக்கிறது. வட்டி இல்லாத நேரத்திற்குள் (பொதுவாக 20-50 நாட்களுக்குள்) பில்லைச் செலுத்தினால், கடனுக்கான வட்டி செலுத்த வேண்டிய தேவையில்லை. இல்லையெனில், ஆண்டுக்கு 30% முதல் 42% வரை வட்டி வசூலிக்கப்படும். ஆகவே நீங்கள் சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், சிறிய தொகை கூட மிகப்பெரிய கடனாக மாறிவிடும்.
உங்களுக்கு ரூ.50,000-க்கு மேல் பணம் தேவைப்பட்டால், அதுவும் கடனைத் திரும்பச் செலுத்த நீண்டநாள் தேவைப்பட்டால், தனிநபர் கடனைத் தேர்வுசெய்யவும். இதில் இஎம்ஐ மாதாந்திரமாக நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், உங்கள் ஒட்டுமொத்த செலவும் குறைவாக இருக்கும்.
குறைவான பணம் தேவைப்பட்டால், பணம் செலுத்த வேண்டிய தேதிக்கு முன்பே முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த முடியும் என்றால், கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கவும். வட்டி இல்லாத காலக்கெடு குறுகிய காலத்தில் கடன் வாங்குவதற்கான மலிவான வழிமுறையாக அமைகிறது. கேஷ்பேக், ரிவார்ட் புள்ளிகள் அல்லது இலவச காப்பீட்டுத் தொகை போன்ற சலுகைகளை நீங்கள் விரும்பினால் கிரெடிட் கார்டு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
திருப்பிச் செலுத்தும் திறன்: முழு பில் கட்டணத்தையும் சரியான நேரத்தில் செலுத்த முடியும் என்று உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவும், இல்லையெனில், தனிநபர் கடன் பாதுகாப்பானது. கிரெடிட் ஸ்கோரின் தாக்கம்: இரண்டு விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் கடன்களை சரியான நேரத்தில் செலுத்துவது உங்கள் கடன் வரலாற்றை மேம்படுத்துகிறது. அதேசமயம் பணம் செலுத்தாதது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
October 13, 2025 1:17 PM IST


