Last Updated:
பிரமாண்டமாக நடைபெற உள்ள உலக பணக்காரரான ஜெஃப் பெசோஸின் திருமண நிகழ்ச்சிகளுக்கு எதிராக வெனிஸ் நகரத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
19 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெசோஸ். 61 வயதான இவருக்கும் இவரது காதலியான பத்திரிகையாளர் லாரன் சான்சேவிற்கும் ஜுன் 24 முதல் 28ம் தேதி வரை இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தை உலகமே உற்று நோக்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் பெசோஸ். இதற்காக அங்குள்ள SAN GIOGIO MARGGIORE தீவையே அவர்கள் முழுமையாக வாடகைக்கு எடுத்துள்ளனர்.
தீவுக்கு செல்வதற்கு முன்பு தங்குவதற்காக வெனிஸ் நகரத்தில் உள்ள 5 ஆடம்பர விடுதிகள் முழுமையாக புக் செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்து தீவுக்கு செல்ல ஏதுவாக அனைத்து வாட்டர் டேக்சிகளையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். பெசோஸ்- சாசேவின் திருமணம், பெசோசுக்கு சொந்தமான KORU என்ற 4300 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 417 அடி நீளம் கொண்ட படகில் நடைபெற உள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தடபுடலாக நடைபெற உள்ள இந்த திருமணத்திற்கு உலக பணக்காரர்கள், திரைபிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பெருந்தலைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த திருமணத்தினால் உலகின் கவனம் வெனிஸ் மீது திரும்பி உள்ளது. ஆனால் உள்ளூரில் இருப்பவர்கள் சிலரோ, பெசோசுக்கு எதிராக கருப்புக் கொடி தூக்கி வருகின்றனர். வெனிஸ் நகரத்துக்கு சுற்றுலாவே பிரதானமான வருவாய் ஆதாரமாக உள்ளது. அதே சமயம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதால் அங்குள்ள புராதன சின்னங்கள் சேதமடைவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், சுற்றுலா பயணிகளின் வருகையால் உள்ளூர் மக்கள் தங்கள் ஊர்களில் வசிக்காமல் வெளியூர்களுக்கு இடம்பெயர்வதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் பெசோசின் திருமணத்தினால் வரும் காலங்களில் அதிகபடியான சுற்றுலா பயணிகள் அங்கு வர தொடங்குவார்கள் என்றும் இந்த திருமணத்திற்காக சுமார் ஒரு வார காலத்திற்கு SAN GIOGIO MARGGIORE தீவே ஸ்தம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தங்களை இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என வெனிஸ் நகர வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெனிஸ் நகரம் முழுவதும் பெசோசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமண கொண்டாட்டங்கள் தொடங்கும் போது நீர் நிலைகளில் குதித்து வாட்டர் டேக்சிகளை மறிக்கப் போவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், பெசோனின் திருமணம் அங்கு நடப்பதற்கு வெனிஸ் மேயர் Luigi Brugnaro, ஆதரவு தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனால் தங்களுக்கு வியாபார ரீதியாக பெரும் பலன்கள் இருக்கும் என்றாலும், அந்த நிலத்தின் பாரம்பரிய அடையாளங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் கொண்டாட்டங்கள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
June 20, 2025 11:14 AM IST
தனித்தீவை வாடகைக்கு எடுத்து காதலி உடன் பிரமாண்ட திருமணம்.. அமேசான் நிறுவனர் பிளானுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. காரணம் என்ன?


