பெங்களூரு: கோடை காலம் நெருங்கும் நிலையில் கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக தகவல். இந்நிலையில், எதிர்வரும் 18-வது ஐபிஎல் சீசனுக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்பட உள்ளது.
ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன்களில் பெங்களூருவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த மைதானம் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் ஹோம் கிரவுண்டாக உள்ளது. 18-வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 7 போட்டிகள் பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த சீசனுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதான பயன்பாட்டுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம். இதை வாரிய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த சீசன் முழுவதும் மைதான பராமரிப்பு சார்ந்து நாள் ஒன்றுக்கு சுமார் 75,000 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. அதை கப்பன் பார்க் நீர் மறுசுழற்சி நிலையத்தில் இருந்து விநியோகியமாக உள்ளது.
நீர் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த ஆண்டு கர்நாடக கிரிக்கெட் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஆண்டும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“கடந்த ஆண்டு நீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது குடிநீர் தேவை போக இதர தேவைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்த வேண்டுமென்ற நகர்வை நாங்கள் முன்னெடுத்தோம். இந்த ஆண்டும் கோடையை முன்னிட்டு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஏனெனில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்” என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
ஆர்சிபி அணியின் ‘கோ கிரீன்’ முன்மாதிரி முயற்சியின் ஒரு பகுதியாக பெங்களூருவில் ஏரிகளை மீட்டெடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏரிகளை தூர் எடுத்து ஆழப்படுத்துவது, அங்கு பல்லுயிர் பெருக்கத்துக்கான பணிகளும் இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.