Last Updated:
கேரளாவைச் சேர்ந்த 18 வயது ஸ்ரீநந்தா, யூடியூப் டயட் வீடியோக்களைப் பார்த்து கடுமையான உடற்பயிற்சிகள் செய்ததால், அனோரெக்சியா நெர்வோசா உளநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
உடல் எடையைக் குறைக்க, யூடியூப் பார்த்து டயட் இருந்த கேரளாவைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னூர் மாவட்டம், கூத்துபரம்பாவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவியான ஸ்ரீநந்தா, தனது உடல் எடை மீது அதீத அக்கறை கொண்டு, ஆன்லைனில் டயட் தொடர்பான வீடியோக்களை பார்த்து வந்தார். அதன் அடிப்படையில், கடந்த 6 மாதங்களாக உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல், வெறும் நீர், காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டு வந்ததாகத் தெரிகிறது. மேலும், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முறையாக உணவு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், தொடர்ந்து டயட் இருந்த நிலையில், 24 கிலோ எடையுடன், ரத்த சர்க்கரை அளவு குறைந்து, குடல் சுருங்கியபடி படுத்த படுக்கையுடன் தலசேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஸ்ரீநந்தா உயிரிழந்தார்.
Also Read | தவெக தலைவர் விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.. என்ன காரணம்?
இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண் அனோரெக்சியா நெர்வோசா (anorexia nervosa) எனப்படும் பசியற்ற தன்மை கொண்ட உளநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கொரோனா பரவலுக்குப் பிறகு, உடல் எடை மீது அதீத அக்கறை கொண்டவர்கள் இத்தகைய மனநோய்க்கு ஆளாவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
March 11, 2025 9:27 AM IST