Last Updated:
மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தோடு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறப்பு பள்ளிகள் மற்றும் சங்கங்களை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 0-10 வயது, 11-18 வயது. 18 வயதிற்கு மேல் போன்ற பிரிவுகளில் சுமார் 280 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் செவித்திறன் பாதிக்கப்பட்டோர், பார்வை குறைபாடு உடையோர், கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோர், அறிவு சார் குறைபாடு உடையோர் ஆகியோருக்கு 12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள், பெண்கள், 15 வயது முதல் 17 வயது வரை ஆண்கள், பெண்கள், 17 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என அந்தந்த வயதுக்குட்பட்டவர்களுக்கென ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட 23 வகை போட்டிகள் நடைபெற்றன.
மேலும், ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கான போட்டியில் 12 வயது முதல் 14 வயது வரை ஆண்கள், பெண்களுக்கு உருளைக்கிழங்கு சேகரித்தலும், 15 வயது முதல் 17 வயது வரை ஆண்கள், பெண்களுக்கு கிரிக்கெட் பந்து எறிதலும், 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தடை தாண்டி ஓடுதலும் நடைபெற்றது.
நிறைவாக, அனைத்து வகை ஆண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுவான போட்டியாக 800 மீ ஓட்டப்பந்தயமும், அனைத்து வகை பெண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பொதுவான போட்டியாக 400 மீ ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட 23 வகையிலான போட்டிகள் நடத்தப்படுகிறது. இவ்விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளை சார்ந்த 800 மாணவ, மாணவியர்கள் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி சங்கங்களை சார்ந்த விளையாட்டு வீரர்களும் போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
Salem,Salem,Tamil Nadu
December 08, 2025 5:14 PM IST

