தஞ்சோங் காத்தோங் சாலை தெற்குப் பகுதியில் நேற்று (ஜூலை 26) திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது, இதன் காரணமாக பெண் ஓட்டுநர் காருடன் அந்த பள்ளத்தில் விழுந்தார்.
இணைத்தளத்தில் பெரும் வைரலாக பகிரப்பட்ட அதன் காணொளிகளில், அவ்வழியாக சென்ற பல வழிப்போக்கர்களும் அருகில் வேலைபார்த்துக்கொண்டிருந்த கட்டுமான ஊழியர்களும் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
ஓடி உதவிய தமிழ்நாட்டு ஊழியர்கள்
அவர்களில் ஒருவர் 46 வயதான பிச்சை உடையப்பன் சுப்பையா என்ற தமிழ்நாட்டு ஊழியர் ஆவார்.
இவர் Ohin கன்ஸ்டரக்சன் கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊழியர்.
கார் பள்ளத்தில் விழுந்ததை தொடர்ந்து மீட்பு பணிகள் எவ்வாறு நடந்தது என்பது குறித்து இன்று (ஜூலை 27) அவர் ஊடகங்களிடம் பேசினார்.
நைலான் கயிற்றை பயன்படுத்தி ஓட்டுநரை மீட்ட ஊழியர்கள்
திடீர் பள்ளம் ஏற்பட்ட சத்தம் கேட்டதாகவும், இதனால் அங்கு வேகமாக ஓடி வந்ததாகவும் சுப்பையா கூறினார்.
அப்போது அந்த குழியில் கார் ஒன்று விழுந்துக் கிடப்பதையும் அவர் கண்டார், அதுக்குள் இருந்த ஓட்டுநர் காரை விட்டு வெளியேறியதாகவும் அவர் சொன்னார்.
பின்னர் விரைவாகச் செயல்பட்டு, நைலான் கயிற்றை பள்ளத்துக்குள்ளே போடுமாறு சக ஊழியர்கள் மூவரிடம் அவர் அறிவுறுத்தினார்.
இருப்பினும் ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பள்ளத்துக்குள் இறங்க விரும்பினர், ஆனால் அது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால் அவர் இதனை ஏற்கவில்லை.
அந்தப் பெண்ணை பள்ளத்திலிருந்து வெளியே தூக்கும் அளவுக்கு ஊழியர்கள் அவர்களுக்கு நெருக்கமாக பெண்ணை இழுத்து கொண்டுவந்தனர்.
பின்னர் ஓட்டுநர் மேலே தூக்கப்பட்டு பத்திரமாக காப்பாற்றப்பட்டார், இந்த மீட்பு பணி இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆனதாக சுப்பையா கூறினார்.
முதலில் பள்ளம் தோன்றியபோது அதனுள் தண்ணீர் நிரம்பவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
திடீர் புதைகுழியை காண்பது முதன்முறை
சிங்கப்பூரில் 22 ஆண்டுகளாக தாம் பணியாற்றி வருவதாக கூறிய சுப்பையா, இதுபோன்ற சம்பவத்தை காண்பது இதுவே முதல் முறை என்றார்.
தனக்கு அச்சம் ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணை எப்படியாவது மீட்கவேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்தியதாக அவர் கூறினார்.
தொடரும் சரிசெய்யும் பணிகள்
சரிசெய்யும் பணிகளை எளிதாக்க, மவுண்ட்பேட்டன் சாலைக்கும் கிழக்கு கடற்கரை பார்க்வேக்கும் இடையே உள்ள தஞ்சோங் கத்தோங் சாலை தெற்கு மூடப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
ஜூலை 27 நிலவரப்படி, சாலை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முதற்கட்ட சோதனைகளின் அடிப்படையில், அப்பகுதியை சுற்றியுள்ள கட்டிடங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை BCA உறுதிப்படுத்தியது.