ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் கடையில் விற்பனைக்கு வந்துள்ள தீபாவளி இனிப்பின் விலை ரூ.1.11 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.
தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்புகள்தான் நினைவுக்கு வரும். இந்நிலையில் நாளை (அக்டோபர் 20) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஓர் இனிப்புக் கடையில் வித்தியாசமான மற்றும் விலை அதிகமான இனிப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த இனிப்புகளின் விலையைக் கேட்டாலே நமக்கு மயக்கம் வருகிறது. ஓர் இனிப்புக்கு ஸ்வர்ண பஸ்மா (தங்க பஸ்பம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. 24 கேரட் எடையிலான உண்ணக்கூடிய தங்கத்தால் நிரப்பப்பட்ட இந்த இனிப்பு ஸ்வர்ண பிரசாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
‘ஸ்வர்ண பிரசாதம்’ இனிப்பு ஒரு கிலோ ரூ.1,11,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்த இனிப்புக் கடையில் விலை உயர்ந்த இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
மிகவும் அழகான பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும் இதை வாங்குவதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளரான அஞ்சலி ஜெயின் கூறும்போது, “இந்த ஸ்வர்ணா பஸ்மாவுக்கு தற்போது அதிக அளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. நகையைப் போன்ற தோற்றத்தில் இந்த இனிப்பு உருவாக்கப்பட்டு நகைப்பெட்டி மாடலில் உள்ள பெட்டியில் வைத்து தருகிறோம்.
தனியாக ஒரு ஸ்வர்ண பஸ்மா வாங்கினால் அதன் விலை ரூ.3 ஆயிரம். கிலோவாக வாங்கினால் ரூ.1.11 லட்சமாகும். இந்த ஸ்வர்ண பஸ்மா என்பது ஆயுர்வேத மருந்து போன்றது. நமது உடலில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு எந்தவிதக் கெடுதலும் வராது. ஆரோக்கியத்தைக் காக்கும்.
இதுதவிர வேறு சில விலை உயர்ந்த இனிப்பு வகைகளையும் விற்பனை செய்கிறோம். ஸ்வர்ண பஸ்மா பாரத் இனிப்பு ஒரு கிலோ ரூ.85 ஆயிரத்துக்கும், சண்டி பஸ்மா பாரத் ரூ.58 ஆயிரத்துக்கும் விற்பனை செய்கிறோம்” என்றார்.