இராகவன் கருப்பையா – நம் நாட்டின் தலைச்சிறந்த முன்னாள் பெருநடை வீரர்களில் ஒருவரான சரவணன் தற்பொழுது உடல்நலம் குன்றியதால் படுத்த படுக்கையாக இருக்கிறார்.
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன் நாட்டுக்காக அவர் மாபெரும் சாதனை புரிந்த போதிலும், அதற்கு அடுத்த நாளே அவர் அடைந்த மன வேதனை தற்போதைய தலைமுறையினரில் நிறைய பேர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
‘கொமன்வெல்த்’ போட்டிகளில் தங்கப்பதக்கம் வெற்றி பெறும் எல்லா மலேசிய வீரர்களுக்கும் ‘பெர்டானா’ கார் வழங்கிய நம் அரசாங்கம் சரவணனுக்கு மட்டும் அதனை கொடுக்க மறுத்ததால் அந்த சமயத்தில் அவர் பெரும் ஏமாற்றமடைந்தார்.
கடந்த 1998ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் அரங்கேறிய 16ஆவது ‘கொமன்வெல்த்’ விளையாட்டுப் போட்டிகளின் பெருநடைப் பிரிவில் நமது வீரர் சரவணன் தங்கப் பதக்கம் வென்றது உலகறியம்.
முதல் முறையாக மலேசியா ஏற்று நடத்திய அந்த போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறும் அனைத்து மலேசியர்களுக்கும் ‘பெர்டானா’ கார் கூடுதல் வெகுமதியாக வழங்கப்படும் என அப்போதைய பிரதமர் மகாதீர் அறிவித்திருந்தார்.
மொத்தம் 70 ‘கொமன்வெல்த்’ நாடுகளை பிரதிநிதித்து 3,600கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கடந்து கொண்ட அந்த விளையாட்டுகளில் மலேசியா 10 தங்கப் பதக்கங்களை வெற்றி பெற்றது. 50 கிலோமீட்டர் பெருநடைப் பிரிவில் சரவணன் பெற்ற தங்கப் பதக்கமும் இதில் அடங்கும்.
தங்கம் வென்ற எல்லாருக்கும் ‘பெர்டானா’ கார் வழங்கப்பட்ட வேளையில் சரவணனை மட்டும் அரசாங்கம் உதாசினப் படுத்தியது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
நான்கு மணி, 10 நிமிடங்கள், 5 வினாடிகளில் போட்டியை முடித்த சரவணனின் சாதனையை 28 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இன்னமும் யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி நிறைவடைய இன்னும் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருந்த வேளையில் முன்னாள் சென்ற நியூஸிலாந்து வீரர் கிரேய்க் பேரட் வெப்பம் தாளாமல் மயங்கி விழுந்தார்.
தங்கம் வெல்லும் வேட்கையில் முழு மூச்சாகக் களத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த 28 வயதுடைய சரவணனுக்கு, கிரேய்க் விழுந்தது கூட தெரியாது. போட்டியிலிருந்து அவர் விலகியதும் தெரியாது.
‘கொமன்வெல்த்’ போட்டிகளின் 96 ஆண்டுகால வரலாற்றில் திடல் தடப் பிரிவில் மலேசியாவுக்குக் கிடைத்துள்ள ஒரே தங்கப் பதக்கம் இது மட்டும்தான் என்பதையும் நாம் இங்கு நினைவுக்கூரத்தான் வேண்டும்.
தங்கப் பதக்கத்தோடு, ‘பெர்டானா’ கார் ஒன்றும் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த சரவணனுக்கு அதற்கு அடுத்த நாள் அரசாங்கம் செய்த ஒரு அறிவிப்பு பேரிடியாக அமைந்தது.
நியூஸிலாந்து வீரர் விழுந்ததால்தான் சரவணன் வெற்றி பெற்றார். எனவே கார் வெகுமதிக்கு அந்த வெற்றியை அங்கீகரிக்க முடியாது எனும் அறிவிலித்தனமான அந்த அதிரடி அறிவிப்பு பெரும்பாலான மலேசியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி கண்டனத்திற்குள்ளானது.
அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான அம்முடிவை நாட்டின் பல்லின தினசரிகளும் கண்டித்த வேளையில் ஆதி குமணன் தலைமையிலான ‘மலேசிய நண்பன்’ பத்திரிகை ஒரு படி மேல் சென்று சரவணனுக்கு விசேஷமான பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்தது.
அந்த தினசரி, பொது மக்களிடமிருந்து நிதி திரட்டி ‘ஹொண்டா’ ரகக் கார் ஒன்றை வாங்கி சரவணனுக்கு பரிசாக வழங்கி அவரை கவுரவப்படுத்தியது வரலாற்றில் இடம்பெறும் ஒரு விஷயமாகும்.

