தங்கம் விலை 5000 டாலர் வரை உயரும்.. சிக்னல் கொடுத்த NDB.. இனியும் அமைதியாக இருந்தா வேலைக்கு ஆகாது!
உலகம் முழுவதும் இருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டைத் தங்கம் மற்றும் வெள்ளி பக்கம் திருப்ப நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்தில் தங்கம் மீதான முதலீடுகள் வெளியேற்றப்பட்டு அதிகளவில் 2 இடத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளன.
முதலாவது ஏஐ வளர்ச்சியை எதிர்நோக்கி ஏஐ நிறுவனத்திலும், ஏஐ சார்ந்த செமிகண்டக்டர், டேட்டா சென்டர் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது. இரண்டாவது இடம் அமெரிக்கப் பத்திர சந்தையில் பெரும் பகுதி முதலீடுகள் குவிந்தது.

தற்போது இவ்விரண்டுக்கும் வேட்டு வைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது, அமெரிக்கா அரசும் – பெடரல் ரிசர்வும் விரைவில் பத்திர முதலீட்டின் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்க உள்ளது. இவை அடுத்த வாரம் நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.
அடுத்தாக ஏஐ, செமிகண்டக்டர் பங்குகள் பெரியளவில் சரியை துவங்கியுள்ளது. ஏற்கனவே ஏஐ மேம்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ள அமெரிக்க ஏஐ நிறுவனங்கள், மறுபக்கம் ஓப்பன் சோர்ஸ் ஏஐ மாடல்களை முடக்கத் திட்டம் போட்டு வருகிறது.
இந்த போட்டி ஏஐ துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் முதலீட்டாளர்கள் கட்டாயம் பாதுகாப்பான முதலீட்டைத் தேடி வரும் போது தங்கம் முக்கியமானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை அடுத்த 12 -24 மாதத்தில் சர்வதேச சந்தையில் ஒரு ட்ராய் அவுன்ஸ் 5000 டாலர் வரையில் உயரும் என NDB வெல்த் மேனேஜ்மென்ட் கணித்துள்ளது.
தற்போது தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 4068 டாலருக்கு வர்த்தகமாகி வரும் நிலையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல் மற்றும் ஆசிய சந்தையில் தொடர்ந்து நிலவும் டிமாண்ட் ஆகியவற்றின் காரணமாகத் தங்கம் விலை உயர்வுக்குப் பெரியளவிலான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்து இக்கணிப்பை வெளியிட்டு உள்ளது.
மேலும் 2026ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் மட்டும் உலகளாவிய மத்திய வங்கிகள் சுமார் 289 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் அதிகளவில் தங்கம் விற்கப்பட்டு உள்ளது, இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கப் பத்திர சந்தையில் கிடைக்கும் அதிகப்படியான வட்டி வருமானம்.
ஆனால் ஈரான் போர் மீண்டும் சுடுப்பிடிக்கும் காரணத்தால் 5000 டாலர் எட்டுவதில் கூடுதல் காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் போர் பெரியதாக வெடிக்கும் என தெரிய வந்த உடன் இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1.61 சதவீதம் சரிந்துள்ளது, கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

