தங்கம் விலை 1.5 லட்சத்தைத் தொட்டது.. மக்கள் எடுத்த முக்கிய முடிவு.. நகை கடைக்காரர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!
இந்திய மக்களையும் தங்கத்தையும் பிரிக்க முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும், ஆனால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்தது மூலம் ஒரு பெரும் கூட்டத்தை நகை கடை பக்கம் செல்ல முடியாமல் தடுத்தது. இதனால் ஒட்டுமொத்த நகை கடை வர்த்தகமும் பாதிக்கக் கூடும் என்ற அச்சமும் நிலவியது.
தற்போது இந்த நிலைமை மாறி வருகிறது, தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் மாற்றுத் திட்டத்தை இந்திய மக்கள் கையில் வைத்துள்ளார்கள் என நகை கடைகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றன. தங்கம் விலை தற்போது இந்தியா ரீடைல் சந்தையில் 1.50 லட்சத்தைத் தொட்டு உள்ளது, ஆனால் செப்டம்பர் மாதத்தில் பதிவான சிறிய அளவிலான சரிவு ஒரு பெரும் பகுதி மக்களை நகை கடைக்கு வரத் தூண்டியுள்ளது.

இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் துவங்கியுள்ளதால், நகைகளுக்கான டிமாண்ட் இந்தியச் சந்தையில் அதிகரித்துள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலையில் 1.50 லட்சம் ரூபாயைத் தொட்டு உள்ள காரணத்தால் மக்கள் தங்களுடைய நகை தேர்வை பெரிய அளவில் மாற்றியுள்ளனர்.
குறிப்பாகப் பெருமளவிலான மக்கள் தற்போது லைட் வெயிட் நகைகளை அதிகம் தேர்வு செய்ய துவங்கியுள்ளனர். அதாவது முன்பெல்லாம் 1-2 பவுனில் கனமான வளையல் வாங்கிய மக்கள், தற்போது 6-7 கிராமில் லைட் வெயிட் வளையல்களை வாங்கி வருகின்றனர்.

இதேபோல் முதலீடு செய்ய முடியாத மக்கள் முன்பு தயக்கம் காட்டி வந்த 18 கேரட், 16 கேரட் தங்க நகைகளுக்கு தற்போது விரும்பி வாங்கத் துவங்கியுள்ளனர் என நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் தூய்மை நகையில் குறையும் போது அதன் விலையும் குறையும் அதேபோல் ரீசேல் வேல்யூ இதற்கு இருக்கும் காரணத்தால் மக்கள் மாறியுள்ளனர். இதைவிட முக்கியமாக 22 கேரட் மற்றும் 16 கேரட் தங்க நகைகளைப் பார்க்கும் போது எவ்விதமான வித்தியாசமும் தெரியாது.
அடுத்த முக்கிய மாற்றமாக இந்த 1.50 லட்சம் ரூபாய் விலையைச் சமாளிக்க முடியாமல் திணறும் மிடில் கிளாஸ் மக்கள் பெரும்பாலானோர் தங்களிடம் இருக்கும் பழைய தங்கத்தைக் கொடுத்துத் தான் புதிய தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். இது காலம் காலமாக இருந்து வந்தாலும் 50-60 சதவீத மக்கள் கையில் இருக்கும் பழைய தங்கத்தை வைத்துத் தான் புதிய நகைகளை வாங்கி வருகின்றனர். 2 -3 வருடத்திற்கு முன்பு இப்பிரிவு வர்த்தகம் 10-15 சதவீதம் மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது.

இது ஒருபக்கம் இருக்க லேவர் மிடில் கிளாஸ் மக்கள் அடுத்த கட்டமாக வெள்ளி நகைகளை அதிகம் வாங்கத் துவங்கியுள்ளதாகவும், இதற்காக நகைக் கடைகள் தங்க நகைகளுக்கு இணையான டிசைனில் வெள்ளி நகைகளைத் தயாரித்து அதற்குத் தங்க முழம் பூசப்பட்டு விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
தங்கத்தை ஒப்பிடுகையில் வெள்ளி விலை குறைவு என்பதாலும், வெள்ளிக்கும் ரீசேல் வேல்யூ இருப்பதாலும் மக்கள் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர்.
இதேபோல் முதலீட்டாளர்களும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதைக் காட்டிலும் வெள்ளி மீதான முதலீட்டுக்கு ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். தற்போது ரீடைல் சந்தையில் வெள்ளி விலை ஒரு கிலோ 2.3 லட்சம் ரூபாயாக இருக்கும் நிலையில் மீண்டும் 4 லட்சம் வரையில் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என நம்பி முதலீட்டாளர்கள் வெள்ளி மீதான முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.
நகை வாங்குவதில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்து நாடு முழுவதும் உள்ள நகைக் கடைகள் தங்களுடைய உற்பத்தியை மாற்றி வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் சீனாவின் 5D HARD Gold தொழில்நுட்பமும் இந்தியாவில் வரத் துவங்கியுள்ளதால் உற்பத்தியாளர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் எளிதானதாக மாறியுள்ளது.

