சென்னை: சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து,ஒரு பவுன் ரூ.53,800 என்னும்புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இவ்வாறு விலை அதிகரித்திருப்பது நகை வாங்குவோரை கவலை யடையச் செய்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச. 4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் யாரும் எதிர்பாராத வகையில் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அதன்படி, மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்படுகிறது.
குறிப்பாக கடந்த 7-ம் தேதி முதல் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. அன்றைய தினம் தங்கம் பவுன் ரூ.52,920-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக உயர்ந்து நேற்று முன்தினம் (ஏப்.10) பவுன் ரூ.53,640-க்கு விற்பனையானது. இதே போல், நேற்றைய தினமும் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.53,800 என்ற வரலாறு காணாத விலையை அடைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,725-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்ததங்கம் பவுன் ரூ.57,560-க்கு விற்கப்பட்டது. இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தங்கத்தின் விலை, நடுத்தர குடும்பத்தினரை கலக்கமடையச் செய்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.500 குறைந்துரூ.88,500-ஆகவும் இருந்தது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது:
தொடர்ந்து சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி நீடித்து வருகிறது. இதேபோல் தங்கத்தின் மீதான முதலீடு காரணமாக தேவை அதிகரித்து வருகிறது. உள்ளூர் சந்தையிலும், வெளி சந்தையிலும் மக்கள் போட்டி போட்டு கொண்டு தங்கத்தை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஒருசில நாட்களுக்கு இதே விலை உயர்வு காணப்படும். வெகு விரைவில் பவுன் தங்கம் ரூ.60 ஆயிரத்தை எட்டும் வாய்ப்பும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.