சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இன்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் விலை ஒரு பவுன் ரூ.97,000-ஐ தாண்டி விற்பனையாகிறது.
கடந்த செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் தங்கம் விலை அக்.7-ல் ரூ.90,400 ஆக உயர்ந்தது. இன்று அக்.17-ம் தேதி ஒரு பவுன் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அதன்படி ட்ரம்ப் வரி விதிப்பு, எச்1பி விசா கட்டணம் உயர்வு, போர்ச் சூழல்கள் எனப் பல்வேறு அரசியல், பொருளாதார சூழல்களால் சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி சிறிய முதலீட்டாளர்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்படுகிறது.
அதேபோல் பிரிக்ஸ் நாடுகளும், டாலருக்கு மாற்றான சக்திவாய்ந்த கரன்சியை உருவாக்கும் முனைப்பில் உள்ளதால், அந்த நாடுகளும் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்து வருகிறது. இதுவும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணம். இந்தியாவில் பண்டிகை காலம் என்பதாலும் தங்கம், வெள்ளி விலை ஏற்றம் காண்கிறது. ஆனால், பண்டிகை காலம் என்பது தற்காலிக காரணம் தான். முக்கியக் காரணம் சர்வதேச பொருளாதார, அரசியல் சூழல்களே.
அதன்படி இன்று (அக்.17) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200-க்கும், பவுனுக்கு ரூ.2400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.97,600-க்கும் விற்பனை ஆகிறது. இது நகை வாங்குவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலை ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.203-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,03,000-க்கு விற்பனையாகிறது.