தங்கம் வாங்கப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்.. திணறும் நகைக்கடைக்காரர்கள்.. ஏன் தெரியுமா..?
இந்தியாவில் தங்க நகை சந்தைக்கு எப்போதுமே வீழ்ச்சி இல்லை என்பதைத் தங்கம் விலை ஒவ்வொரு முறையும் முக்கிய கட்டத்தை எட்டும் போதும் மக்கள் புரிய வைத்து வருகிறார்கள்.
தங்கம் விலை ஜனவரி மாதம் உச்சத்தைத் தொட்டபோது நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்க நகைகளை வாங்காமல், தங்கக் காயின், பார்களை வாங்கினர். இன்னும் சிலர் கோல்டு ஈடிஎப், சில்வர் ஈடிஎப் ஆகியவற்றில் முதலீடு செய்தனர்.

தற்போது தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 4 சதவீதம் குறைந்துள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி மக்கள் மீண்டும் தங்க நகைகளை வாங்க நகைக் கடைக்குப் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
இதனால் இந்திய மக்கள் எப்போதும் தங்கத்தையும், தங்க நகை சந்தையைக் கைவிட்டது இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தியுள்ளனர். ஆனால் தற்போது இந்திய மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் உருவாகியுள்ளது. இது பண்டிகை காலம் மற்றும் திருமணங்கள் அதிகம் நடக்கும் சீசன் என்பதால் தங்க நகைகளுக்கான தேவை அதிகமாகியுள்ளது.
அப்படி பல்வேறு தேவைக்காக நகை கடைக்குச் செல்லும் மக்கள் மிகவும் சூதானமாக முடிவுகளை எடுத்து வருகின்றனர். அதாவது தங்க நகை தான் வேண்டும், ஆனால் குறைந்த தொகையில் வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் உள்ளனர்.
இதனால் லைட்வெயிட் நகைகள், கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளாக மாற்றுவது எனச் செலவுகளைக் குறைத்து அதிக நகைகளை வாங்குவது அதிகரித்துள்ளது என நகைக் கடைகள் கூறிவருகின்றன.
அமெரிக்காவின் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும் வரையில் தங்கம் விலையில் அதிகப்படியான தடுமாற்றம் இருக்கும் காரணத்தால், மக்கள் விலை தடுமாற்றத்தின் காரணமாக நகை வாங்குவதை ஒத்திவைக்காமல் நகை வாங்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆன்லைன் நகை விற்பனை தளமான கார்ட்லேன் தலைவர் கூறுகையில் மக்கள் தற்போது நகை வாங்குவதற்கு அதிகளவில் ஆர்வம் காட்டினாலும், வழக்கத்தை விடவும் அதிகமாக வாங்கும் நகைக்கும் கொடுக்கும் பணத்திற்கும் கணக்கு பார்க்கிறார்கள். இதேபோல் ப்ரீமியம் நகைகளை அதிகம் தேர்வு செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் தற்போது வைரங்களின் விலை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தாலும் வைர நகைகளை அதிகம் வாங்கத் துவங்கியுள்ளனர், ரஷ்யாவில் இருந்து வரும் வைரத்தின் சப்ளை குறைந்துள்ளதாலும், செயற்கையாக உருவாக்கப்படும் Lab Grown Diamond அதிகமாகச் சந்தைக்கு வரும் காரணத்தாலும் வைரத்தின் விலை கடந்த 2-3 வருடத்தில் பாதியாகக் குறைந்துள்ளது.
இதனால் தற்போது சந்தையில் கற்கள் குறிப்பாகப் பெரிய கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் அதிகம் விற்பனையாகி வருகிறது என நகைக் கடைக்காரர்கள் கூறுகின்றனர். மக்கள் மத்தியில் நகை வாங்குவதில் ஏற்பட்டு உள்ள மாற்றம் நகைக் கடைகளுக்கு உற்பத்தியில் துவங்கி சப்ளை செயின் வரையிலும் பல புதிய சவால்கள் உருவாகியுள்ளது.

