கோத்தா பாரு:
கிளந்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘பாரம்பரிய முறையில் தங்கம் எடுக்கும்’ (Gold Panning) உரிமத்தைப் பெற இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் மற்றும் பகுதிநேரத் தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாகத் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கிளந்தான் துணை மந்திரி பெசார் டத்தோ முகமட் ஃபட்லி ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்த உரிமத்தைப் பெற விண்ணப்பக் கட்டணமாக RM100 மற்றும் உரிமம் அங்கீகரிக்கப்பட்ட பின் ஆண்டு கட்டணமாக RM100 வசூலிக்கப்படுகிறது.
இந்த உரிமம் கிளந்தான் மாநில மக்களுக்கு மட்டுமே (Residents only) வழங்கப்படும். மேலும், தங்கம் எடுப்பதற்கு நவீன இயந்திரங்களையோ அல்லது நவீன தொழில்நுட்பங்களையோ பயன்படுத்த அனுமதி இல்லை. பாரம்பரிய ‘பேன்’ (Pan) முறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தங்கம் எடுப்பதற்கான அதிகாரப்பூர்வ இடங்கள் வரும் புதன்கிழமை (ஜனவரி 14) அறிவிக்கப்படும். முதற்கட்டமாக பின்வரும் நான்கு மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன:
குவா மூசாங் (Gua Musang), ஜேலி (Jeli), தானா மேரா (Tanah Merah)ம், கோலா கிராய் (Kuala Krai) என்பன பரிந்துரைக்கப் பட்டன.
மேலும் தங்கம் எடுக்கும் பணி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
கண்டெடுக்கப்படும் தங்கத்தை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் மையங்களில் மட்டுமே விற்க வேண்டும். மேலும் இந்த உரிமம் மாற்றத்தக்கது அல்ல (Non-transferable) மற்றும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கை மூலம் மாநிலத்தின் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்துவதோடு, சட்டவிரோதத் தங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் கிளந்தான் அரசு திட்டமிட்டுள்ளது.




