
ட்ரோன் விமானங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய மற்றும் முறையான நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, ட்ரோன் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதி செய்வதற்காக இந்த விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் இந்த ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இந்த புதிய ஒழுங்கு விதிகள் இந்த ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், ட்ரோன்களின் எடையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, 250 கிராம் முதல் 25 கிலோகிராம் வரை எடையுடைய ட்ரோன்கள் இந்த ஒழுங்குமுறைகளின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய, விளையாட்டுப் பொருள் வகையைச் சேர்ந்த ட்ரோன்கள் இந்த ஒழுங்குப்படுத்தலிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.
ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட எடையுடைய அல்லது வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து ட்ரோன்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டு, விதிமுறைகளுக்கு அமைவாக இயக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்காகவும் தனிப்பட்ட ஒழுங்குவிதிகள் உள்ளதாகவும், அவற்றை பின்பற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

