பீஜிங்: சீனாவில் சுற்றுலாத் தலங்களில், பெண்களுக்கான டாய்லட்களில் கதவில் டைமர் ஒன்றும் பொருத்தியுள்ளனர் அதிகாரிகள்… ஒருவர் டாய்லட் உள்ளே சென்றதில் இருந்து ஒவ்வொரு வினாடிகளும் கணக்கெடுத்து எவ்வளவு நேரமாக உள்ளே இருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக வெளியே காட்டி விடும் விதமாக இந்த டைமர் உள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்று சீனா. சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் அவ்வப்போது சில வினோத சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கை. மக்களின் வாழ்க்கை முறையில் தொடங்கி அங்கு விதிக்கபடும் ரூல்ஸ் வரை பல விசித்திரங்கள் நடைபெறும். தற்போது அப்படியான ஒரு விஷயம்தான் இணையத்தில் வேகமாக பரவி நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. இது குறித்த விவரங்களை பார்ப்போம்.
சீனாவில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று யுங்காங் க்ரோட்டஸ். வடக்கு சீனாவில் உள்ள டடோங் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த சுற்றுலா தலத்தில் சுமார் 51 ஆயிரம் புத்த சிலைகளும் 250க்கும் மேற்பட்ட குகைகளும் உள்ளன. 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த இந்த குகைகளில் அக்காலத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடிய பல ஓவியங்களும் இடம் பெற்று இருக்கின்றன.
இந்த இடத்திற்கு சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விசிட் அடிப்பது வாடிக்கை. வெளிநட்டு பயணிகளும் கூட அதிக அளவில் இங்கே சுற்றுலாவிற்கு வருகிறார்கள். இதனால், எப்போதும் பிசியாகவே இந்த இடம் காணப்படுகிறது.. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இதில் என்ன வினோதம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்..
இனிமேல்தான் விஷயமே இருக்கிறது.. பொதுவாக சுற்றுலா தலங்களில் பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் இயற்கை உபாதைகளை கழிக்க டாய்லட் வசதியும் செய்யப்பட்டு இருக்கும். இந்த சுற்றுலா தலத்திலும் இப்படி ஏராளமனா டாய்லட்கள் உள்ளன. ஆனால், பெண்களுக்கான டாய்லட்களில் கதவில் டைமர் ஒன்றும் பொருத்தியுள்ளனர் அதிகாரிகள்…
ஒருவர் டாய்லட் உள்ளே சென்றதில் இருந்து ஒவ்வொரு வினாடிகளும் கணக்கெடுத்து எவ்வளவு நேரமாக உள்ளே இருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக வெளியே காட்டி விடும் விதமாக இந்த டைமர் உள்ளது. இந்த டைமர் ஏன் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். அதிகமாக லைனில் காத்திருப்பதை தவிர்க்கவே இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளதாக காரணத்தை கூறியிருக்கிறார்கள்.
தற்போது டைமருடன் கூடிய இந்த டாய்லட் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் எவ்வளவு நேரம் என கணக்கெடுத்து அதற்கு கட்டணம் வசூலிக்க போகிறார்களா என்ன? நிம்மதியாக இயற்கை உபாதையை கூட கழிக்க விட மாட்டார்கள் போல் தெரிகிறது என காட்டமாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால், இதற்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக சுற்றுலா தலத்தை மேனேஜ் செய்யும் அதிகாரிகள் கூறுகையில், இங்கே வரும் கூட்டத்தை சமாளிக்கவே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளோம். யார் எவ்வளவு நேரம் செல்கிறார்கள் என கணக்கெடுப்பது இல்லை. டாய்லட்டை யாரும் பயன்படுத்துகிறார்களா? என காட்டவே இப்படி ஒரு ஏற்பாடு என அசர வைக்கும் வகையில் விளக்கமளித்து இருக்கிறார்கள்.
