Last Updated:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் டெஸ்ட் அணிக்கான கேப்டனுமான ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார். இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் நடவடிக்கையில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதீஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அன்ஷுல் கம்போஜ், கலில் அகமது, சர்பராஸ் கான் உள்ளிட்டோர் இந்த இந்தியா ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கான அடுத்த கேப்டனாக ஜடேஜா நல்ல தேர்வாக இருப்பார் என்று சிஎஸ்கே அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் பதிவிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “கேப்டன் பொறுப்புக்கு சிலர் தகுதியாக இருக்கலாம். அப்படி புதிய கேப்டன் தேர்வு செய்யப்படும் சூழலில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் முதலில் இடம் பெற வேண்டும்.
அணியில் மிகவும் அனுபவம் மிக்க வீரராக ரவீந்திர ஜடேஜா உள்ளார். எனவே அவரிடம் கேப்டன்ஷிப் குறித்து பேச வேண்டும். நீங்கள் இளம் வீரரை கேப்டனாக்க 2 ஆண்டுகளுக்கு பயிற்சி கொடுக்கலாம் என்று நினைத்தால் ஜடேஜாவை கேப்டனாக நியமிக்கலாம். அந்த இளம் வீரரை துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவின் தலைமையின் கீழ் நியமிக்கலாம்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
இந்திய அணியின் எந்த ஒரு போட்டிக்கும் ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படவில்லை. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றார். ஆனால் அந்த தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் நடைபெற்ற 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனி ஏற்றுக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.


