இத்தாலி பிரதமர் மெலோனி
இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கான கருத்துப் பிரிவில் ஏராளமானோர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் என்று மெலோனிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்ற போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல்களைத் தொடர்ந்து போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலி பிரதமர் வரை சென்றிருக்கிறது.
மாணவர்களின் மிகப்பெரிய போராட்டத்தின் தாக்கம் இப்போது சர்வதேச அளவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.
பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்
உலகத் தலைவர்களில், பிரதமர் நரேந்திர மோடியுடன் மிகவும் நட்பாகப் பழகும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஏராளமானோர் நீட் தேர்வு குறித்துப் பேசியிருக்கிறார்கள். இந்திய மாணவர்களின் குரல்களைக் கேளுங்கள், உங்கள் அருமை நண்பரை பதவி விலகச் சொல்லுங்கள், அடுத்த முறை பிரதமர் மோடியைப் பார்க்கும்போது இந்திய மாணவர்கள் ஜூலை 20ஆம் தேதி என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்றெல்லாம் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது “அன்பிற்குரிய நண்பரான” மோடியை பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.
