Last Updated:
அடுத்த ஓராண்டிற்கு அமைதியை சீர்குலைக்கக் கூடாது என்ற முதன்மை நிபந்தனையுடன், புதிய அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் பிரம்மாண்டமான ‘லெஹ்ரா தோ திரங்கா’ (தேசியக் கொடியை ஏந்துங்கள்) போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இப்போராட்டத்தில் பங்கேற்க முயன்ற காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனரான அபிஜித் திப்கேவை நேற்று டெல்லி காவல்துறையினர் தடுப்புக் காவலில் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து, விதிகளை மீறியதாக இன்று காலை அவர் முறைப்படி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அபிஜித் திப்கே, இன்று மண்டீர் மார்க் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாரதிய BNSS பிரிவுகள் 126 மற்றும் 170-ன் கீழ் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் முடிவில், அடுத்த ஓராண்டிற்கு அமைதியை சீர்குலைக்கக் கூடாது என்ற முதன்மை நிபந்தனையுடன், புதிய அமைதிப் பத்திரத்தில் (Peace Bond) கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
CJP கட்சியின் சட்ட விவகாரங்கள் தலைவர் ரத்னா சிங், திப்கேவின் கைதை சட்டவிரோதமானது என விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைதியான முறையில் தேசியக் கொடியை ஏந்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுப்பது எவ்வாறு குற்றமாகும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
அதேபோல, இப்போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை விடுவிக்கப்பட்ட அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் (AISA) தலைவர் நேஹா போரா, மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறையைக் கடுமையாகச் சாடினார். ஜனநாயக வழியிலான போராட்டங்களை முடக்கவே இத்தகைய சட்டவிரோத தடுப்புக் காவல்கள் பயன்படுத்தப்படுவதாகவும், தேர்தல் ஆணையரின் ராஜினாமா வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.


