Last Updated:
“இந்திய மக்கள் அவதியுறுவதைப் பற்றி ஒரு முறை கூட பேசவில்லை. டெல்லி, பெஹல்காம் என எங்கும் நமது சொந்த மக்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை” என காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தெரிவித்தார்.
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆண்டுகள் நிறைவடைவது குறித்து இன்று (டிசம்பர் 8) மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “சர்தார் வல்லபாய் பட்டேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் நாம் ஈடுபட்டு இருக்கிறோம். வந்தே மாதரம் பாடல் நமது சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியது.
நமது போர் முழக்கத்தின் அடிப்படையாக இருந்தது வந்தே மாதரம். வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு என்பது இந்தியாவின் அவசர காலம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் வந்தது. வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தியாவின் ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த 150வது ஆண்டு இந்தியாவின் சுயசார்பு காலத்தில் கொண்டாடி வருகிறோம்.
தற்போது நாம் மேற்கொள்ளும் இந்த விவாதம் எதிர்கால இந்தியாவிற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்ட போது நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கி இருந்தது. நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம்.
வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். ஆகவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கூட்டணி என்றெல்லாம் இல்லை. வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கிலாந்து ராணியை கடவுள் காப்பாற்ற வேண்டும் என்ற பாடலை தான் இந்தியர்கள் பாட வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் தான் வந்தே மாதரம் பாடல் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது” என பேசினார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், “வந்தே மாதரம் பாடலை காங்கிரஸ் ஆதரித்தது, தேசிய பாடலாக கொண்டுவருவதற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்தது. ஒவ்வொரு விவாதத்திலும், பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் நேரு மற்றும் காங்கிரஸ் பெயரை குறிப்பிட்டுவருகிறார்.
ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில், நேருவின் பெயரை 14 முறையும், காங்கிரஸ் பெயரை 50 முறையும் பயன்படுத்தினார். அரசியலமைப்பு 75வது ஆண்டு கொண்டாட்டத்திலும், நேருவின் பெயரை 10 முறையும், காங்கிரஸின் பெயரை 26 முறையும் பயன்படுத்தினார். 2022 குடியரசுத் தலைவர் உரை விவாதத்தில் 15 முறை நேருவின் பெயரையும், 2020 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் உரை விவாதத்தில் 20 முறையும் நேருவின் பெயரை பயன்படுத்தினார்.
நரேந்திர மோடியும், அவரது சகாக்களும் எவ்வளவு கடினமாக முயன்றாலும், நேருவின் பங்களிப்புகளின் மீது ஒரு கரும்புள்ளியையும் வைக்க முடியாது என்பதை சொல்லிக்கொள்கிறேன். இந்திய மக்கள் அவதியுறுவதைப் பற்றி ஒரு முறை கூட பேசவில்லை. டெல்லி குண்டு வெடிப்பு குறித்து பிரதமர் மோடி ஒரு இடத்திலும் பேசவில்லை. டெல்லி, பெஹல்காம் என எங்கும் நமது சொந்த மக்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
December 08, 2025 4:52 PM IST
“டெல்லி.. பெஹல்காம் பற்றி பேசமாட்டார்… நேரு, காங்கிரஸை பேசுவார்..” – பிரதமர் மோடி மீது காங்கிரஸ் விமர்சனம்


