Last Updated:
THE CATHEDRAL தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, இயேசு போதனைகள் நல்லிணக்கத்தை தரட்டும் என பதிவிட்டார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
டெல்லியில் உள்ள THE CATHEDRAL தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் டெல்லி பிஷப் ரெவரெண்ட் பால் சுவருப் பிரதமருக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். தொடர்ந்து கிறிஸ்துமஸ் பாடல்கள் இசைக்கப்பட்டன.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கிறிஸ்துமஸ் பண்டிகை நம்பிக்கை, அரவணைப்பு மற்றும் அன்பை கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் தாம் பங்கேற்ற பிரார்த்தனையின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நள்ளிரவு பிரார்த்தனையுடன் கோலோகலமாக தொடங்கியது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நள்ளிரவு கோலாகலமாக நடைபெற்றது. `கீழை நாடுகளின் லூர்து நகர்’ என்ற பெருமையுடன் அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பலிகளின் நிறைவில் நள்ளிரவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ், குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்கு காண்பித்தார்.
சென்னையில் புகழ்பெற்ற சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவு முதலே சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குழந்தை இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது.
Dec 25, 2025 11:35 AM IST
டெல்லி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார் பிரதமர் மோடி.. பிரார்த்தனையில் பங்கேற்று வழிபாடு


