Last Updated:
டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிக்கவைக்கப்பட்டு, பெரும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், மருத்துவர்கள் முஸாமில், அதீல், ஷாஹீன், மொஹியுதின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகின்றனர். தொடர் விசாரணையில் டெல்லி செங்கோட்டை அருகே காரை கொண்டுவந்து வெடிக்க வைத்து, அதில் உயிரிழந்த உமர் நபிக்கு காரை வாங்கிக் கொடுத்த அமிர் ரஷித் அலி என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
அமிர் ரஷித் அலி கைதைத் தொடர்ந்து செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக செய்தி அறிக்கை வெளியிட்ட என்.ஐ.ஏ. அமைப்பு, டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல். இதில், காரில் வந்து வெடிகுண்டை வெடிக்கவைத்தது உமர் உன் நபிக்கு கார் வாங்கிக் கொடுத்தது காஷ்மீரைச் சேர்ந்த அமிர் ரஷித் அலி. இந்த அமிர் ரஷித் அலி, காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து உமர் உன் நபிக்கு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். விசாரணையின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான விசாரணையையும், கைது நடவடிக்கையையும் என்.ஐ.ஏ. மேற்கொண்டுவரும் சூழலில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 13ல் இருந்து 15ஆக உயர்ந்துள்ளது.
November 17, 2025 6:43 PM IST


