Last Updated:
டெல்லி சட்டமன்றத்தில் அமளி காரணமாக எதிர்கட்சித் தலைவர் அதிஷி உட்பட 12 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்.
டெல்லியில் கடந்த 27 வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு அவர் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து டெல்லி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் துவங்கியது. மூன்று நாள் நடைபெற இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று அம்மாநில ஆளுநர் வி.கே. சக்சேனா உரையாற்றினார்.
அப்போது டெல்லி மதுபானக் கொள்கை குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநர் தனது உரையை படிக்கவிடாமல், எதிர்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை அமைதியாக இருக்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதனை ஏற்காத ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் அதிஷி உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு… ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய காலமிது” – அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சட்டமன்ற முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் உருவப்படம் அகற்றியதன் மூலம் பாஜக அவரை அவமதித்துள்ளது என குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரது படங்களை அகற்றியது தொடர்பாக நேற்றே பெரும் விவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரான அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில், “பாஜக தனது உண்மையான தலித் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு முகத்தைக் காட்டியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் டெல்லி சட்டப்பேரவையின் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன” எனப் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் கவனம் பெற்றது.
இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் ரேகா குப்தா, “அரசாங்க தலைமையின் புகைப்படம் இடம்பெறக் கூடாதா? குடியரசுத் தலைவர் மற்றும் தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம் வைக்கக் கூடாதா? எனது பணி மக்களுக்குப் பதிலளிப்பதே மற்றும் நான் இவர்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை. அம்பேத்கர் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. வேறு இடத்தில் புகைப்படங்களை வைக்கப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” எனத் தெரிவித்தார்.
February 25, 2025 10:20 PM IST


