ஃபரிதாபாத் செக்டார் 37-ல் உள்ள ராயல் கார் பிளாசாவின் உரிமையாளர் அமித், ஃபரிதாபாத் காவல்துறையின் உதவியுடன் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கட்கிழமை அன்று டெல்லி செங்கோட்டை பகுதி அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காரை விற்பனை செய்ய அமித் உதவியதாகக் கூறப்படுகிறது.
“அமித்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹூண்டாய் i20 கார் இதற்கு முன்பு யாரிடம் இருந்தது போன்ற முழு விவரங்களையும் புலனாய்வுக் குழு கண்காணித்து வருகிறது. மேலும், இந்தக் கார் குண்டுவெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் கைகளுக்கு எவ்வாறு சென்றது என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். அவரது ஷோரூமுக்கு வாகனத்தை யார் கொண்டுவந்தார்கள், யார் மூலம் டாக்டர் உமர் நபி அவரைத் தொடர்பு கொண்டார் என்பதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்திய காரின் விற்பனை மற்றும் அதன் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய இடைத்தரகர்களை அடையாளம் காண, சிறப்புப் பிரிவு டீலர்ஷிப் பதிவுகள், பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் உமர் நபி, வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்தபோது, அந்தக் காரை ஓட்டிச் சென்றதாக நம்பப்படுகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தேசிய தலைநகருக்குள் உள்ள மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பழைய கார் டீலர்ஷிப்களையும் உள்ளடக்கிய விரிவான சோதனை இயக்கத்தை டெல்லி காவல்துறை தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள 15 மாவட்டங்களில் உள்ள அனைத்து துணை காவல் ஆணையர்களும் உள்ளூர் கார் டீலர்களுடன் சந்திப்புகளை நடத்தி, விற்பனை மற்றும் கொள்முதல் பதிவுகளை சோதனை செய்ய அந்தந்த ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளை வழிநடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட அல்லது இன்னொருவர் பெயருக்கு மாற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க, தங்கள் அதிகார வரம்பில் உள்ள கார் டீலர்ஷிப்களுக்குச் செல்லுமாறு ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கார் வாங்குபவர்களின் விவரங்களைச் சேகரித்து, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளை அடையாளம் காணும் பணியும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். தேசிய தலைநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் இதேபோன்ற சரிபார்ப்புகளை நடத்த ஹரியானா காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
போலி அடையாளங்களைப் பயன்படுத்தியோ அல்லது நிலையான சரிபார்ப்பு நடைமுறைகளைத் தவிர்த்து பணப் பரிவர்த்தனைகள் மூலமாகவோ செய்யப்பட்ட எந்தவொரு வாகன கொள்முதலையும் அடையாளம் காண்பதே இதன் நோக்கமாகும். இதற்கிடையில், போலீசாருடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் வாகன சரிபார்ப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்யவும் டெல்லியில் பல கார் டீலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
“கார் விற்பனையாளர்கள் எந்தவொரு வாகனத்தையும் ஒப்படைப்பதற்கு முன்பு முறையான விற்பனை-கொள்முதல் பதிவுகளை பராமரிக்கவும், கார் வாங்குபவர்களிடம் இருந்து ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் முகவரிச் சான்றுகள் போன்ற அடையாளச் சான்றுகளை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பரிவர்த்தனைகள் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்கவும் அவர்களுக்கு கூறப்பட்டுள்ளதாக” காவல்துறை அதிகாரி கூறினார்.
செங்கோட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை விரிவடையும் நிலையில், கார் பரிவர்த்தனை தொடர்புடைய மேலும் பலரை சிறப்புப் பிரிவு விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
November 14, 2025 7:57 PM IST
டெல்லி குண்டுவெடிப்பு எதிரொலி… பழைய கார் விற்பனையாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த காவல்துறை…!

