Last Updated:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்கவும் மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்த நிலையில் நாளை முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களின் அடிப்படையில் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 400 ஐ கடந்து சுவாசிக்கவே தகுதியற்ற மிகவும் மோசமான நிலையை அடைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்கவும் மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கும் தனித்தனி நேரக்கட்டுபாடுகளை அமல்படுத்தி ஒரே நேரத்தில் அனைவரும் அலுவலகம் வருவதை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஎஸ் 6 தரநிலைய வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் பதிவெண் கொண்ட சரக்கு லாரிகள் தவிர்த்து மற்ற லாரிகளும் தலைநகரில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட கட்டுமான ஊழியர்களுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை முழுமையாக பள்ளிகள் ஆன்லைன் வழியில் இயங்கவும், 6 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹைபிரிட் வகையில் வகுப்புகளை நடத்தவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
December 17, 2025 3:16 PM IST


