புதுடெல்லி,பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை டெல்லியில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) உச்சி மாநாடு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட உயர் திறன் கொண்ட தொடக்க நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீனாவில் தயாரிக்கப்பட்ட ‘யுனிட்ரீ கோ2’ என்ற ரோபோ நாயை தாங்கள் தயாரித்ததாக கூறி ஏ.ஐ. மாநாட்டில் காட்சிப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர், ‘இந்த ரோபோ நாய் எங்கள் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது’ என்று பேட்டியளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்தியா மட்டுமின்றி, சீனாவை சேர்ந்தவர்கள் பலரும் அந்த ரோபோ நாய் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டது என கருத்து பதிவிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஏ.ஐ. உச்சி மாநாட்டில் இருந்து கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சமீபத்திய ஏ.ஐ. உச்சி மாநாடு கண்காட்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. அரங்கத்தில் இருந்த எங்கள் பிரதிநிதிக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ரோபோ நாயின் தயாரிப்பு, தொழில்நுட்ப தோற்றம் குறித்து அவருக்கு தெரியாது.
மேலும் கேமரா முன்பு பேசும் ஆர்வத்தில், பத்திரிகையாளர்களிடம் பேச அவருக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையிலும், உண்மைக்கு மாறான தகவல்களை அவர் வழங்கிவிட்டார்.
இந்த சம்பவத்தில் எந்த உள்நோக்கமும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். கல்வி ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது. ஏற்பாட்டாளர்களின் உணர்வை புரிந்துகொண்டு நாங்கள் வளாகத்தை காலி செய்துள்ளோம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




