Last Updated:
டெல்லியில் நான்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் விவேக் விகார் பகுதியில் 4 மாடிகள் கொண்ட குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 25-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ஞாயிறு விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவில் பலரும் தாமதமாக தூங்கச் சென்றுள்ளனர். மேலும், வெப்பம் காரணமாக சில வீடுகளில் இரவு முழுவதும் ஏ.சி. ஓடியுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த நேரம் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் தீப்பற்றியது தெரியாமல் இருந்துள்ளது. இரண்டாவது தளத்தில் பற்றிய தீ, மூன்றாவது, நான்காவது மாடிக்கும் பரவியுள்ளது. இதையடுத்து தான் குடியிருப்புவாசிகள் பதறியடித்து எழுந்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினருடன் விரைந்து வந்தனர். அதற்குள் கட்டடத்தின் பெரும் பகுதியில் தீ சூழ்ந்ததால் பலரும் உள்ளே சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினர். உயிரை பணயம் வைத்து மீட்பு படையினர் உள்ளே சென்று 15 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.
இருந்த போதும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக ஏ.சி. வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது உறுதி செய்யப்படாததால் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதிகாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


