Last Updated:
டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழையானது ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் முதல்முறையாக காற்று மாசுபாட்டைக் குறைப்பதை இலக்காகக் கொண்டு செயற்கை மழை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான திட்டமானது IIT கான்பூர் மூலமாக இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த செயற்கை மழையானது ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை அமல்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
“ஜூலை 3ம் தேதி வரை செயற்கை மழைக்கு தோதான நிலைமைகள் இல்லை என்ற காரணத்தால் ஜூலை 4 முதல் ஜூலை 11ம் தேதி வரை அமல்படுத்தப்படலாம் என திட்டமிடப்பட்டுள்ளது” என்று கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா அவர்கள் அறிவித்தார். மேலும், இது குறித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு சோதனை நடைபெறுவதற்கான கோரிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
“டெல்லி மக்களுக்கு சுத்தமான காற்றை வழங்குவது எங்களுடைய நோக்கம்” என்பதையும் சிர்சா வலியுறுத்தினார். இது ஒவ்வொரு டெல்லிவாசிக்கும் மிகவும் அடிப்படையான ஒரு உரிமையாக அமைவதாகவும் மற்றும் இதற்காக அனைத்து சாத்தியமான தீர்வுகளை அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். “இதன் காரணமாகவே இந்த செயற்கை மழை என்ற தைரியமான படியை நாங்கள் எடுத்திருக்கிறோம். இது நிச்சயமாக அர்த்தமுள்ள ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.
முன்னதாக நகரத்தின் மாசுக்கட்டுப்பாடு முயற்சிகளுக்கு பாஜக மற்றும் மத்திய அமைச்சகம் ஒரு சில இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும், மழைக்காலம் மாசுபாடு அதிகபட்ச நிலையில் இருக்கும்போது செயற்கை மழை முன்மொழிவு வழங்கியதை கேலி செய்து பேசியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
“நாங்கள் தான் முதலில் MoU கையெழுத்திட்டு IIT கான்பூருக்கு அனைத்து பேமெண்ட்களையும் செய்தோம் மற்றும் தேவையான அங்கீகாரங்களுக்கு விண்ணப்பித்தோம். ஏனெனில், நாங்கள் உண்மையாகவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க விரும்பினோம்” என்று அவர் கூறினார். “ஆனால் அவர்களோ இந்த செயற்கை மழையை பற்றித் தவிர வேறு எதைப்பற்றியும் பேசவில்லை. மறுபுறம் நாங்கள் மிகத்தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். இதனால்தான் இப்போது அரசு உருவான 4 மாதங்களுக்கு உள்ளாகவே டெல்லியின் முதல் செயற்கை மழைக்கான தேதியை முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
‘Technology Demonstration and Evaluation of Cloud Seeding as an Alternative for Delhi NCR Pollution Mitigation’ என்ற பெயரில் அமல்படுத்தப்பட உள்ள செயற்கை மழை திட்டத்தில் 5 படிகள் அடங்கும். அதில் ஒவ்வொரு படியிலும் வடமேற்கு மற்றும் வெளிப்புற டெல்லிப் பகுதியில் தோராயமாக 100 சதுர கிலோமீட்டர்களை இலக்காகக் கொண்டு 90 நிமிடங்கள் வரை செயற்கை மழை நீடிக்கும்.
July 02, 2025 7:10 PM IST