Last Updated:
பாரதிய ஜனதாவின் அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்றதாக கூறப்படும் ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியுள்ளார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 20 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அங்கம் வகித்து வந்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் அதிமுக உடன் பாஜக மீண்டும் கூட்டணி வைத்தது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்தார். அதிமுக கூட்டணி வைத்த அதிருப்தி, பிரதமர் மோடி தமிழகம் வந்த போது ஓபிஎஸ் நேரம் கேட்டும் சந்திக்க முடியாமல் போனதால் ஓபிஎஸ் கூட்டணியில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானனது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக மூத்த தலைவர்கள் ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன் இல்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து, கடந்த 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக உரிமை மீட்பு குழுவின் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், வரும் 15 ஆம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், பாரதிய ஜனதாவின் அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்றதாக கூறப்படும் ஓ.பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ், பாஜகவை சேர்ந்த மற்ற தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர்கள் உடன் பேச்சுவாரத்தை நடத்திய பின்னர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
December 03, 2025 11:31 AM IST


