டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது: இதுவரை 77 பேர் உயிரிழப்பு சமீபத்திய டெங்கு கண்காணிப்பு தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டியுள்ளது. செப்டம்பர் 27 வரை 100,127 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 29,964 நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியிருந்த நிலையில், செப்டம்பர் 27 வரையிலான காலப்பகுதியில் 4,637 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இங்கு 21,234 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது தேசிய மொத்த எண்ணிக்கையில் 21.21% ஆகும். இதனைத் தொடர்ந்து கொழும்பில் 19,634 நோயாளர்களும் (19.61%), கண்டியில் 7,624 நோயாளர்களும் (7.61%), களுத்துறையில் 6,365 நோயாளர்களும் (6.36%), மாத்தறையில் 6,284 நோயாளர்களும் (6.28%) மற்றும் காலியில் 5,465 நோயாளர்களும் (5.46%) பதிவாகியுள்ளனர்.
நாட்டின் மொத்த டெங்கு நோயாளர்களில் பாதியளவுக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். மேல் மாகாணத்தில் 52,562 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த எண்ணிக்கையில் 52.50% ஆகும்.
தென் மாகாணத்தில் 14,388 நோயாளர்களும் (14.37%), மத்திய மாகாணத்தில் 9,498 நோயாளர்களும் (9.49%) மற்றும் சபரகமுவ மாகாணத்தில் 8,268 நோயாளர்களும் (8.26%) பதிவாகியுள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

