கோலாலம்பூர்:
மலாக்காவின் டுரியான் துங்கல் அணையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மனித உடற்பாகங்கள் எனச் சந்தேகிக்கப்படும் எச்சங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில மக்களுக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது என மலாக்கா மாநில அரசு உறுதியளித்துள்ளது.
மாநில மக்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப் போக்கும் வகையில், மலாக்கா மாநிலச் செயலாளர் டத்தோ சல்ஹா சாலே நேற்று இரவு இதற்கான அவசர விளக்க அறிக்கையை வெளியிட்டார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட நீர் தரக் கண்காணிப்பு ஆய்வுகளில் எந்தவிதப் பாதிப்போ அல்லது வழக்கத்திற்கு மாறான அளவீடுகளோ கண்டறியப்படவில்லை என்றும், சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் பாதுகாப்பாக உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“அணைப் பகுதி என்பது மலாக்கா மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பதால், பொதுமக்களின் கவலையை மாநில அரசு நன்கு புரிந்து கொண்டுள்ளது. இருப்பினும், மக்களுக்கு விநியோகிக்கப்படும் முன் நீர் பலகட்டச் சுத்திகரிப்புகளுக்கும், உரியத் தரக்கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறது.” என்று டத்தோ சல்ஹா சாலே கூறினார்.
சம்பந்தப்பட்ட அணைப் பகுதியில் நீர் மாதிரிகளைச் சேகரித்துத் தொடர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கண்காணிப்புகளை தீவிரப்படுத்தவும் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக அரசுக் காவல் துறை (PDRM) மற்றும் தொழில்நுட்ப முகமைகளுடன் இணைந்து அரசு விசாரணை நடத்தி வருகிறது.
அணைப் பகுதியில் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டதை நீர் விநியோகத்திற்கான அச்சுறுத்தலாகவோ அல்லது நீர் மாசுபாடாகவோ கருதக்கூடாது என அறிவுறுத்தியுள்ள மாநில அரசு, அதிகாரப்பூர்வமற்ற வதந்திகளையோ அல்லது தவறான தகவல்களையோ பொதுமக்கள் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.



