Last Updated:
போட்டியை முடித்த பிறகு பேசிய பிலிப்ஸ், இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் ஓவர்களைத் தாக்கி ஆடியது சேஸிங்கில் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர் கிளென் பிலிப்ஸ் அபாரமாக விளையாடி, இருதரப்பு டி20 தொடர் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஹேமில்டனில் உள்ள செட்டன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில், கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதன் மூலம், கடந்த 2023-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்தின் பில் சால்ட் (Phil Salt) எடுத்த 331 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். கிளென் பிலிப்ஸ் இந்தத் தொடர் முழுவதிலும் சேர்த்து மொத்தமாக 341 ரன்கள் குவித்து, இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தத் தொடரில் கிளென் பிலிப்ஸின் வரிசையான ரன் குவிப்பு (82*, 70, 17, 107 மற்றும் 65*) அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம், ஒரு இருதரப்பு டி20 தொடரில் 4 முறை 50 பிளஸ் (50+) ரன்களைப் பதிவு செய்த 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இவருக்கு முன்பாக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மற்றும் ஜப்பானின் எஸ். ரவிச்சந்திரன் ஆகிய இருவர் மட்டுமே இச்சாதனையைச் செய்துள்ளனர். இந்தத் தொடர் முழுவதும் அவரது அபாரமான ஆட்டத்திற்காகத் தொடர் நாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
போட்டியை முடித்த பிறகு பேசிய பிலிப்ஸ், இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் ஓவர்களைத் தாக்கி ஆடியது சேஸிங்கில் மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது எனக் குறிப்பிட்டார்.
நியூசிலாந்து அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றபோதிலும், முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இருப்பினும், கிளென் பிலிப்ஸின் இந்த வரலாற்றுச் சாதனை மற்றும் நியூசிலாந்தின் வலுவான முடிவு வரவிருக்கும் ஒருநாள் போட்டிகளுக்கு அந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.


