Last Updated:
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் நவம்பர் 4-ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவிற்கு (37) சமீபகாலமாக ஒருநாள் (ODI) போட்டித் தொடர்களில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்குப் பதிலாக இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அக்சர் படேல் முதன்மைத் தேர்வாக உருவெடுத்துள்ளார். அடுத்த ஆண்டு (2027) நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் ஓராண்டே எஞ்சியுள்ள நிலையில், ஜடேஜாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முன்னாள் இந்திய வீரர்களான சேதேஷ்வர் புஜாரா மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோர் விவாதித்துள்ளனர்.
ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்துப் பேசிய முன்னாள் பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா, “இந்திய அணியின் ஒருநாள் திட்டங்களில் ஜடேஜாவை வைத்திருக்க விரும்பியிருந்தால், இந்நேரம் அவர் நியூசிலாந்து தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது அக்சர் படேல் ஒருநாள் போட்டிகளில் முதன்மை ஆல்-ரவுண்டராக மாறிவிட்டார். ஜடேஜாவின் வயதைக் கருத்தில் கொண்டு, இனி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், டி20, ஒருநாள் போட்டிகளுக்கானத் திட்டத்தில் அவர் இல்லை என்றும் அணி நிர்வாகம் அவரிடம் தெளிவுபடுத்தியிருக்கலாம் என்று கருதுகிறேன். ஏற்கனவே அவர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், ஒருநாள் போட்டிகளுக்கான அவரது பயணமும் இனி முடிவுக்கு வரக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் சற்று மாறுபட்ட பார்வையை முன்வைத்தார். “ஜடேஜா நேரடியாக முதன்மை அணியில் மீண்டும் இடம் பிடிக்காவிட்டாலும், இந்திய அணியின் இன்சூரன்ஸ் பாலிசியாக அவரே தொடர்வார். அக்சர் படேலுக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த மாற்று வீரர் வேறு யாரும் இல்லை. உலகக்கோப்பைக்கு முன்பாக அக்சர் படேலுக்கு ஏதேனும் காயம் அல்லது பின்னடைவு ஏற்பட்டால், தேர்வாளர்களின் முதல் தேர்வாக நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவே இருப்பார்” என்று நாயர் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் நவம்பர் 4-ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு வலுவான அணியை உருவாக்கும் நோக்கில் இந்தியா இந்தத் தொடரை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


