Last Updated:
அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவது குறித்து முடிவெடுக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி கெடு விடுத்துள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையே நிலவும் அசாதாரண சூழல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்தது.
அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட வங்கதேச அணி மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தங்கள் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும், அல்லது இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் விளையாடும் குரூப்-க்கு தங்களை மாற்ற வேண்டும் என வங்கதேச அணி கோரிக்கை வைத்தது.
ஆனால் அந்த அணியின் கோரிக்கையை ஐசிசி தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், வங்கதேச அணியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஸ்காட்லாந்து அணியை விளையாட வைக்க ஐசிசி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் டாகாவில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து வரும் 21ஆம் தேதிக்குள் முடிவெடுக்க ஐசிசி கெடு விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச வீரர்கள் சிலர் இந்தியாவில் விளையாடத் தயாராக இருந்தாலும், அந்நாட்டு அரசாங்கம் மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் பிடிவாதமான முடிவால் இந்தச் சிக்கல் நீடிக்கிறது. ஒருவேளை வங்கதேசம் பின்வாங்கினால், அது அந்த நாட்டு கிரிக்கெட்டிற்குப் பெரிய நிதி இழப்பையும், ஐசிசியின் தடைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


