டிரைவிங் லைசென்ஸ், RC புக் விதிகளில் மாற்றம்.. இனி எல்லாமே ஆன்லைனில்..!!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் விதிகளை பெறும் நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் முறைக்கு படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முன்பை போல நாம் எதற்கெடுத்தாலும் அரசு அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே சான்றிதழ் உள்ளிட்டவற்றை விண்ணப்பம் செய்து பெற்று கொள்ளலாம். ஆனால் டிரைவிங் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுநர் உரிமங்கள், வாகனங்களுக்கான பதிவு சான்றாக ஆர்சி புக் உள்ளிட்டவற்றுக்கு இன்னும் பழைய நடைமுறையே பின்பற்றப்படுகிறது.

பொதுவாக புதிதாக வாகங்கள் வாங்குவோர் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்வோர் அதற்காக விண்ணப்பம் செய்து கட்டணமாக 250 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் சிப் பொருத்தப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் விண்ணப்பதாரா்களின் முகவரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால் விண்ணப்பதாரா்களுக்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி புக் கிடைப்பதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இந்த காலதாமதத்தை தவிா்க்கும் வகையில், ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் முறையில் பொதுமக்கள் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை தமிழ்நாட்டில் அறிமுகப்படும் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் இது தொடர்பாக சட்டமன்றத்திலேயே அறிவிப்பு வெளியிட்டார்.
இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் வரும் செப்டம்பர் 15 முதல் ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான தேர்வு அல்லது வாகன பதிவு முடிந்த நாளிலேயே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது ஓட்டுநா் உரிமம் அல்லது பதிவு சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் ஓராண்டுக்கு இந்த பதிவிறக்கம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனவே செப்டம்பர் 12ஆம் தேதிக்கு பின் ஓட்டுநா் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டிஜிட்டல் சான்றிதழ்களில் இடம்பெறும் கியூஆா் குறியீடு மூலம் அரசின் தரவுத்தளத்தில் உள்ள அசல் ஆவணங்களை உடனடியாக சரிபாா்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி புக்கினை சாதாரண தாளிலோ, லேமினேட செய்தோ அச்சிட்டு பயன்படுத்தலாம். க்யூஆா் குறியீடு தெளிவாக இருந்து, அதன் மூலம் மின்னணு சரிபாா்ப்பு செய்ய முடியும் என்ற நிலையில் அந்த ஆவணம் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.
மேலும், பரிவாகன், டிஜிலாக்கா் உள்ளிட்ட தளங்களில் டிஜிட்டல் ஆவணங்கள் இணைக்கப்படும். செப்டம்பர் 12-க்கு பின் அரசு மற்றும் அதன் சாா்பு அமைப்புகள், ஓட்டுநா் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழின் பழைய முறையிலான அச்சு பிரதியை கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நடைமுறைக்கு ஏற்ப பரிவாகன் தளத்தில் தேவையான மாற்றங்களை செய்யவும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வரவும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே போக்குவரத்து போலீசார் கேட்கும் போதும் பிற இடங்களீலும் வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி புக் கேட்கப்பட்டால் நீங்கள் டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்ததையே இனி காட்டலாம். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற நீங்கள் டெஸ்டுக்கு சென்று அது ஏற்கப்பட்டால் அன்றைய தினமே ஆன்லைனில் ஓட்டுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்ய முடியும். இனி ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

