Last Updated:
உ.பி.யில் கணவனை பாம்பால் கடிக்கவிட்டு கொன்ற மனைவி, ரகசிய காதலனுடன் கைது. ரூ.20 லட்சம் காப்பீட்டு பணத்திற்காக கொலை.
உத்தர பிரதேசத்தில் காதல் கணவனை பாம்பால் கடிக்கவிட்டு கொலை செய்த மனைவி, தனது ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள ஹஸ்தினாபூர் பகுதியைச் சேர்ந்தவர் அதுல். இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தாமினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இளம் தம்பதி தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே மழலையர் பள்ளி தொடங்கி நடத்தி வந்துள்ளனர். காதல் திருமணம் செய்தவர்களின் இல்லற வாழ்க்கை இனிமையாக சென்ற நிலையில் அதுல் திடீரென உயிரிழந்தார்.
இரவில் தூங்கும்போது பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரின் மனைவி தாமினி கூறியுள்ளார். ஆனால், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் தங்களது புலன் விசாரணையை தொடங்கினர். அதில் அதுல் நடத்தி வரும் பள்ளியின் வாகன ஓட்டுநர் துஷாரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது. ஓராண்டுக்கு முன் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிக்கு சேர்ந்த துஷார் மூலம் காதல் தம்பதி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
துஷார் உடன் நெருக்கமாக பழகிய தாமினி, ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த கணவன் அதுல் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கணவனை கொலை செய்துவிட்டு, அவர் பெயரில் இருந்த 20 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டு தொகையை பெற்று ரகசிய காதலனுடன் வாழ தாமினி சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்காக துஷார் மூலம் காரை ஏற்றி கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். நல்வாய்ப்பாக அதில் இருந்து அதுல் தப்பியுள்ளார். இரண்டாவது முயற்சியாக இரவில் தூங்கும்போது பாம்பை கடிக்கவிட்டு கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, ரகசிய காதலன் துஷார் பாம்பாட்டிகளிடம் இருந்து விஷ பாம்பை வாங்கி வந்துள்ளார். முன்னதாக, இரவில் கணவன் அதுல் உட்கொண்ட உணவில் தாமினி தூக்க மாத்திரையை கலந்துள்ளார்.
அதை அறியாமல் உட்கொண்ட அதுல் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருக்கிறார். பின்னர், தனது காதலனை வரவழைத்த மனைவி, அவர் கொண்டு வந்த பாம்பை படுக்கையில் விட்டுள்ளார். போர்வைக்குள் விடப்பட்ட விஷப் பாம்பு தூங்கிக் கொண்டிருந்த அதுலை கடித்துள்ளது. உடலில் விஷம் ஏறியதும் அவர் தூக்க நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தாமினி மற்றும் துஷாரின் செல்போன்களை சோதனை செய்ததில் இருவரும் அடிக்கடி மணிக்கணக்கில் பேசியதும், சதித் திட்டம் தீட்டியதும் உறுதியானது.
அத்துடன், துஷாரின் செல்போனில் ஒரு பெட்டியில் இருந்த பாம்பின் புகைப்படமும் கண்டுபிடிக்கப்பட்டது- கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் இருவரும் சேர்ந்து அதுலை கொலை செய்துவிட்டு, பாம்பு கடித்ததாக கூறி ஊரை நம்ப வைக்க சதி செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ஆயுள் காப்பீட்டு பணம் 20 லட்சம் வந்ததும் அதில் 5 லட்சத்தை கொடுக்க பாம்பாட்டிகள் இருவரிடம் பேரம் பேசியுள்ளனர்.
இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பாம்பாட்டிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மீரட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டு ரவிதா என்ற இளம்பெண் தனது காதலன் அமர்தீப் உடன் சேர்ந்து கணவன் அமித் காஷ்யப்பை பாம்பால் கடிக்க விட்டு கொலை செய்தார். அந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதேபோன்று தாமினி ரகசிய காதலனுடன் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டு பணத்திற்காக தனது காதல் கணவனை பாம்பால் கடிக்கவிட்டு கொலை செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.


