Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த செலவின மற்றும் வரிக்குறைப்பு மசோதா பிரதிநிதிகள் சபையில் 218 பேர் ஆதரவுடன் நிறைவேறியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டு வந்த செலவின மற்றும் வரிக்குறைப்பு மசோதா பிரதிநிதிகள் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வரி குறைப்பு மற்றும் நாட்டின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்தும் மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் கொண்டு வந்தார். அதில், தனிநபர் வருமான வரிகள், தொழில் வரிகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் அதற்கு 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழிந்திருந்ததை, ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மசோதாவை அழகிய பெரிய மசோதா என்று டிரம்ப் புகழ்ந்த நிலையில், எலான் மஸ்க் மட்டுமின்றி டிரம்பின் குடியரசுக் கட்சியினரே கடுமையாக எதிர்த்தனர். அண்மையில் செனட் சபையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா கடும் இழுபறிக்கு மத்தியில் நிறைவேறியது.
இந்நிலையில், பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில், மசோதாவிற்கு ஆதரவாக 218 பேர் வாக்களித்தனர். 214 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதன்மூலம் டிரம்ப் கொண்டு வந்த மசோதா பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது. இது டிரம்பிற்கு கிடைத்து மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய அதிபர் டிரம்ப், இந்த மசோதா அமெரிக்காவை ஒரு ராக்கெட் கப்பலாக மாற்றும் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று நடைபெறும் விழாவில் டிரம்ப் இந்த மசோதாவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
July 04, 2025 9:06 AM IST
டிரம்ப் கொண்டு வந்த வரிக்குறைப்பு மசோதா பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றம்!