Last Updated:
இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும், இது சிறந்த நடவடிக்கை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியுடன், ரஷ்யாவில் இருந்து ராணுவத் தளவாடங்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியானது.
இதுபற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும், இது சிறந்த நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.
அதேநேரம், ரஷ்யாவிடம் இருந்து இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை, அவற்றின் தரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே எந்த நாட்டிடம் இருந்து கொள்முதல் செய்வது என முடிவெடுக்கப்படுவதாகவும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ தடை விதிக்கவில்லை என்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டிருப்பது போன்று தகவல் எதுவும் தெரியவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 02, 2025 2:01 PM IST