Last Updated:
ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்புடன் அலாஸ்காவில் நடந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொண்டார்.
அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து ரஷ்ய அதிபர் புதின் பேசினார்.
உக்ரைன்- ரஷ்யா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசினார். இந்நிலையில், டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம் புதின் பேசியுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு குறித்து தன்னுடன் பகிர்ந்து கொண்ட புதினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் உடனான மோதலுக்கு ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இது தொடர்பான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா- ரஷ்யா இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடியுடன் புதின் ஆலோசித்தார்.
கடந்த 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதில் முக்கிய அம்சமாக, ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்காவின் அலாஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது சிறப்பு விமானத்தில் அலாஸ்கா சென்ற புதினுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார். சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் உற்சாகமான முகத்துடன் பயணித்தனர்.
இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மூடிய கதவுகளுக்கு பின்னால் சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் புதின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்களின் பின்னணியில் சமாதானத்தை தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
August 18, 2025 10:17 PM IST


