Last Updated:
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முந்தைய தலைவரான லக்ஷ்மன் நரசிம்மனை நீக்கிய பிறகு நிக்கோல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.
ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான (சிஇஓ), பிரையன் நிக்கோல், நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலரை சம்பாதித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். 2024ம் ஆண்டில் தலா 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்த ஆப்பிள் சிஇஓ டிம் குக் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போன்ற முக்கிய தொழில்நுட்பத் தலைவர்களைவிட, இவர் அதிக அளவு சம்பாதித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு அதிகமாக சம்பளம் வாங்கும் காரணத்தால் அமெரிக்காவிலேயே அதிக ஊதியம் பெறும் நிர்வாகி என்ற பெருமை நிக்கோலிற்கு கிடைத்துள்ளது.
நிக்கோல் செப்டம்பர் 2024ம் ஆண்டு ஸ்டார்பக்ஸில் சேர்ந்தார். தனது பணிக்கான ஊதியமாக, ஜனவரி 2025-க்குள் மொத்தம் 96 மில்லியன் அமெரிக்க டாலரை பெற்றுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை கூறுகிறது. அவரது வருவாயில் பெரும்பாலானவை, அதாவது 94 சதவிகிதம் நிறுவனத்தின் செயல்திறன் அளவீடுகளுடன் இணைக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனைகள் மூலம் வருகிறது. கூடுதலாக, நிக்கோல் தனது புதிய பதவியைத் தொடங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு 5 மில்லியன் அமெரிக்க டாலரை போனஸாக பெற்றுள்ளார்.
ஸ்டார்பக்ஸ் ஜனவரி 24, 2025 தேதியிட்ட விரிவான அறிக்கையில், நிக்கோலின் ஊதியம் குறித்த விவரம் நமக்கு தெரிய வருகிறது. இதில் வீட்டுச் செலவுகளுக்காக 1,43,000 அமெரிக்க டாலர் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கிட்டத்தட்ட பாதியளவு வரிகளுக்கு சென்றுவிடும். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டிற்கும் சியாட் நகரில் உள்ள ஸ்டார்பக்ஸ் தலைமையகத்திற்கும் இடையே பயணம் செய்வதற்காக 72,000 அமெரிக்க டாலரை பெறுகிறார் நிக்கோல். மற்றொரு 19,000 அமெரிக்க டாலர் தொகை நிறுவன விமானத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் முதல் 20 சிஇஓ-க்களில் ஒருவராக நிக்கோலை ப்ளூம்பெர்க் சம்பள குறியீடு தரவரிசைப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தனிநபர் கடன் – தொழில் கடனுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் முந்தைய தலைவரான லக்ஷ்மன் நரசிம்மனை நீக்கிய பிறகு நிக்கோல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார். விற்பனை வீழ்ச்சி, அமெரிக்காவில் தொழிற்சங்க முயற்சிகள் மற்றும் உலகளாவிய புறக்கணிப்பு அழைப்புகள் போன்ற சவால்களை தனது பதவியின்போது நரசிம்மன் எதிர்கொண்டார். வலுவான தலைமைத்துவ அனுபவத்திற்காகவும், சிக்கலான நிலைமையில் உள்ள வணிகங்களை லாபம் ஈட்டும் வகையில் மாற்றும் நற்பெயருக்காகவும் நிக்கோலை சிஇஓ-வாக கொண்டுவந்துள்ளது ஸ்டார்பக்ஸ்.
இதையும் படிக்க: யுபிஐ ஐடியுடன் கிரெடிட் கார்டை இணைப்பது சரியான அணுகுமுறையா…?
நிக்கோலின் பணி மாறுதல் சுமூகமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, ஸ்டார்பக்ஸ் அவருக்கு வீட்டு வசதி, தொலைதூர பணி நெகிழ்வுத்தன்மை மற்றும் நிறுவனத்தின் ஜெட் விமானத்திற்கான அணுகலை வழங்கியுள்ளது. ஸ்டார்பக்ஸின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டக்கூடிய திறமையான தலைவர் என்று நிறுவனம் அவரைப் பாராட்டியுள்ளது.
January 31, 2025 1:24 PM IST
டிம் குக், கூகுளின் சுந்தர் பிச்சை ஆகியோரை முறியடித்து, நான்கே மாதங்களில் ரூ.825 கோடி சம்பாதித்த சிஇஓ; யார் தெரியுமா…?


