Last Updated:
டிட்வா புயலால் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்தியா 12 டன் நிவாரணம் அனுப்பியுள்ளது.
டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையை கடந்து வந்த டிட்வா புயலால் அந்நாட்டின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குடியிருப்புகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில் மகியான்கானயா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் யானைகள் மூழ்கிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புயல் பாதிப்புகள் தொடர்பாக அந்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், உடனடியாக அவசர நிலையை பிரகடனம் செய்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதை ஏற்று அதிபர் அநுரா குமார திசநாயக அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அவசர நிலைச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும், மருத்துவப் பணியாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியா சார்பில் 12 டன் நிவாரண பொருட்களுடன் சி-130 ஜே விமானம் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஏற்கனவே ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதய்கிரி மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
November 29, 2025 7:46 PM IST


