Last Updated:
டிஜி தங்கம், இ-தங்கம் உள்ளிட்டவற்றை தாங்கள் கண்காணிக்கவில்லை என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் செபி தெரிவித்திருந்தது.
டிஜிட்டல் தங்கம் தொடர்பாக பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி வெளியிட்டுள்ள எச்சரிக்கை குறித்து மக்கள் குழப்பமடைய வேண்டாம் என கூறும் பொருளாதார நிபுணர்கள், அதிக கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
டிஜி தங்கம், இ-தங்கம் உள்ளிட்டவற்றை தாங்கள் கண்காணிக்கவில்லை என்றும், இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் செபி தெரிவித்திருந்தது.
இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு முதலீட்டில் அபாயம் இருக்கிறது என்பதற்காக அது தவறான முதலீடு இல்லை என நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த நிதி முதலீடு நிபுணர் சோம. வள்ளியப்பன் தெரிவித்துள்ளார்.
நியூஸ்18 தமிழ்நாடுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “செபி பங்குச்சந்தையில் தவறுகள் நடக்காமல் இருக்க கண்காணித்து வருகிறது. பங்குச் சந்தைகளில் தங்கம் முதலீடுகளை செபி கண்காணித்து வருகிறது.
டிஜி கோல்டு வர்த்தகத்தை செபி கண்காணிக்கவில்லை. அதனால் இந்த வர்த்தகத்தில் சில தவறுகள் நடக்கலாம் என்றுதான் கூறியுள்ளது. தடை செய்யவில்லை. இந்த வர்த்தகத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும். இப்போது சற்று இளைப்பாறுகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்க டாலருக்கு பதில் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்து வருகின்றன. நன்கு தெரிந்த பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வது சிறந்தது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
November 09, 2025 9:13 PM IST


