கர்நாடக மாநிலத்தில் இருந்து வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா, 2024 ஆண்டு ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மீண்டும் போட்டியிட்டார். தேர்தல் காலத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, பிரஜ்வல் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி தேர்தல் அலையை ஓவர்டேக் செய்து, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பிரஜ்வல் வீட்டில் வேலை செய்த பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 4 பேர் பாலியல் புகார் அளித்தனர். இதில், மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள் உட்பட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை அறிந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார். 35 நாட்களுக்குப் பின் 2024 மே கடைசியில் பெங்களூரு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அவர் அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
இதையடுத்து பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கு, எம்பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.. மேலும், ஆய்வாளர் ஷோபா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது-
இந்த குழு, 123 சாட்சிகளுடன் ஆயிரத்து 632 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை 2024 செப்டம்பரில் தாக்கல் செய்தது. அதில், பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணை 2021ஆம் ஆண்டில் இரண்டு முறை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. இதில் 26 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
அவர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பணிப்பெண் தொடர்பான முதல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என அதிரடி தீர்ப்பளித்தார்.
இதில், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் முக்கிய துருப்பாக இருந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண் சம்பவத்தின் போது, தனக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது புலம்பிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் பிரஜ்வலின் முகம் தெரியவில்லை என்றபோதும், தடயவியல் பகுப்பாய்வு அறிக்கை மூலம் அது அவர் தான் என்பது உறுதியாகியுள்ளது.
பிரஜ்வல் தனது பண்ணை வீட்டில் வைத்து பணிபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போது, அந்த பெண் அணிந்திருந்த பாவாடை மற்றும் சீலை அங்குள்ள அலமாரியில் போடப்பட்டுள்ளன. மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பின் விசாரணை அதிகாரி அந்த ஆடைகளை கைப்பற்றியுள்ளார்.
கசங்கிய நிலையில் இருந்த ஆடைகைளில் உள்ள சான்றுகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, பிரஜ்வல் ரேவண்ணா கையும் களவுமாக சிக்கியுள்ளார். அதுவே அவர், குற்றவாளி என்பதற்கு முக்கிய ஆதாரமாகவும் இருந்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து சிறையில் இருந்து வரும் நிலையில், ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Bangalore [Bangalore],Bangalore,Karnataka
August 03, 2025 7:37 AM IST
டிஎன்ஏ டெஸ்ட் முதல் வீடியோக்கள் வரை… பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை உறுதி செய்ய உதவிய ஆதாரங்கள்!

