இந்தியாவின் இந்தத் தாக்குதலில் முக்கிய குறியாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தன் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இந்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதை மசூத் அசாரே உறுதியும் செய்துள்ளார்.
யார் இந்த மசூத் அசார்?
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில் பிறந்தவர் மௌலானா மசூத் அசார். இவரது தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். மசூத் அசார் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். ஆனால், பத்திரிகை தொழிலை விட்டு விட்டு, ஹர்கத்-உல்-அன்சார், ஹர்கத்-உல்-முஜாஹிதின் போன்ற அமைப்புகளில் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டார்.
1994 ம் ஆண்டு காஷ்மீரில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த போது ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டு மசூத் அசார் சிறையிலடைக்கப்பட்டார். இதனால், 1999 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி நேபாளத்திலின் காத்மண்டுவிலிருந்து டெல்லிக்கு கிளம்பிய IC 814 விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தினர்.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளை பணயக்கைதியாக வைத்து இந்திய சிறையிலுள்ள மசூத் அசார் உள்ளிட்ட மூன்று கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென பயங்கரவாதிகள் நிபந்தனை விதித்தனர். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், பயணிகளின் நன்மையை கருதி மசூத் அசார், உமர் ஷேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் ஆகியோரை விடுவிக்க உத்தரவிட்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மசூத் அசார், தனது சொந்த ஊரான பஹவல்பூர் சென்று ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பை தொடங்கி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாக திகழும் நாடாளுமன்றத்தின் மீது 2001- ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினார். 170 பேரை பலிகொண்ட 2008- மும்பை தாக்குதலிலும் மூளையாக செயல்பட்டார். இடையில் ஒருமுறை பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு உரிய ஆதாரங்கள் இல்லை என கூறி விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, பதன்கோட் விமானப்படை தள தாக்குதல், உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல் என மசூத் அசாரின் பயங்கரவாத தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சீனாவின் முட்டுக்கட்டைகளை மீறி ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலில் 2019- ஆம் ஆண்டு மே மாதம் 4- ஆம் தேதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வைத்தது இந்தியா.
மசூத் அசார் குடும்பத்தில் பலியானவர்கள் யார்?
இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வரும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் தாக்குதலை நடத்தியது. இதில், மசூத் அசாரின் உதவியாளர்கள் நான்கு பேர், மசூத் அசாரின், தாய், மூத்த சகோதரி மற்றும் அவரது கணவர், மசூத் அசாரின் சகோதரியின் மகன் மற்றும் அவரது மனைவி, மற்றொரு மருமகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டதை மசூத் அசாரே உறுதியும் செய்துள்ளார்.
டார்கெட் செய்யப்பட்ட முக்கிய பயங்கரவாதி… ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தட்டி தூக்கியது எப்படி?

