டாடா சன்ஸ் சந்திரசேகரன் திடீர் ராஜினாமா.. ஆடிப்போன டாடா குழும ஊழியர்கள்!
டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக விளங்கும் என். சந்திரசேகரன் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடக்க இருக்கும் AGM கூட்டத்திற்கு முன்பாகவே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ரத்தன் டாடா தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான முடிவாக டாடா சன்ஸ் தலைவர் பதவியை டாடா குடும்பத்திற்கு வெளியில் இருந்து ஒருவரை நியமித்தார். 2017ஆம் ஆண்டில் இருந்து டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் என்.சந்திரசேரன், இவரது தலைமையில் டாடா குழுமத்தை ஏர்லைன்ஸ், செமிகண்டக்டர், எலக்ட்ரானிக்ஸ், பேட்டரி, டிஜிட்டல் வர்த்தகம் என பல துறையில் விரிவாக்கம் அடைந்துள்ளது.
என். சந்திரசேகரன் தனது முடிவை டாடா சன்ஸ் நிர்வாக குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சேர்மன் ஆக இவருடைய பதவி காலம் பிப்ரவரி 2027 வரையில் இருக்கும் காரணத்தால் அதுவரையில் இப்பதவியில் தொடர்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

என். சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிர்வாக குழுவிற்கு முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னுடைய பதவி காலம் முடிவடைவதற்குள் புதிய சேர்மன்-ஐ சேர்வு செய்யவும், முறையாக அதிகாரத்தை மாற்றவும் ஒத்துழைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்திரசேகரனின் வெளியேற்றம் டாடா குழுமத்தில் இருக்கும் பிற முக்கிய நிறுவனங்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டாடா குழுமத்திற்கு தங்க முட்டையிடும் வாத்தாக இருக்கும் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உட்பட பல நிறுவனங்களின் சேர்மன் ஆகவும் விளங்குகிறார். 2017ல் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து டாடா குழுமத்தின் தூணாக இருந்து வருகிறார்.
ஆகஸ்ட் 18ஆம் தேதி சந்திரசேகரனின் பதவிக்காலம் நீட்டிப்பு மற்றும் இப்பதவியில் பிப்ரவரி 2027 வரையில் தொடர்வதற்காக டாடா சன்ஸ் நிர்வாக குழுவின் டைரக்டராக தொடர்வது குறித்தும் முடிவுகளை எடுக்கப்பட திட்டமிட்டு இருந்தது. ஆனால் இதற்குள் சந்திரசேகரன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனம் தான் டாடா குழுமத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் தாய் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 66 சதவீத பங்குகளை கொண்டு பெரும் ஆதிக்கம் செய்யும் டாடா டிர்ஸ்ட் அமைப்பும், அந்த அமைப்பின் தலைவருமான நோயல் டாடா தான் சந்திரசேகரனின் மறுநியமனத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
சந்திரசேகரன் கல்லூரி படிப்பை முடித்த பின்பு டாடா குழுமத்தில் சேர்ந்த இவர், டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்து அதன் பின்பு டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். சந்திரசேகரனின் வயது தற்போது 63, டாடா குழுமத்தின் அதிகாரிகளின் ஒய்வு வயது 65 ஆக இருக்கும் வேளையில் முக்கியமான கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

