Last Updated:
தெலங்கானாவில் மர்மப் பெண் ஒருவர், டாக்டர் வேடத்தில் மருத்துவமனைக்குள் வந்து, நோயாளி அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டாக்டர் வேஷம் போட்டு மருத்துவமனைக்குள் புகுந்த பெண் ஒருவர், நோயாளி அறைக்குள் புகுந்து 15 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். பெண் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பெண் யார்? டாக்டர் வேடத்தில் வந்த மர்ம பெண் சிக்குவாரா?
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஓல்டு போயேன்பள்ளி பகுதியை சேர்ந்த சுதாராணி என்பவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று சுதாராணி இருந்த அறைக்கு வந்த ஒரு பெண் டாக்டர், சுதா ராணிக்கு பரிசோதனை நடத்த வேண்டும், அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று கூறி, அறையில் இருந்த உறவினர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளார்.
பின்னர் பரிசோதனை செய்வது போல் நடித்த அந்தப் பெண் சுதா ராணிக்கு மயக்க மருந்து கொடுத்து, அவரை மயங்கச் செய்துள்ளார். தொடர்ந்து அவர் அணிந்திருந்த சுமார் 15 சவரன் எடையுள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். போகும்போது சுதாராணியின் உறவினர்களிடம் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். தூங்குவதற்காக மருந்து கொடுத்திருக்கிறேன். அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று கூறிச் சென்று விட்டார். எனவே, அறைக்குள் சென்ற சுதாராணியின் உறவினர்கள் அவரை தொந்தரவு செய்யவில்லை.
நீண்ட நேரமாகியும் சுதா ராணி எழாத காரணத்தால், சந்தேகம் அடைந்த அவருடைய உறவினர்கள் போர்வை விலக்கிப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த ஆபரணங்களை காணவில்லை. அதன் பின்னரே வந்தது டாக்டர் இல்லை. டாக்டர் வேடத்தில் வந்தது கொள்ளைக்காரி என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம், வந்த பெண் யார் என்றே எங்களுக்கு தெரியாது என்று கை விரித்துவிட்டது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் வேஷம் போட்டு கொள்ளையடித்துச் சென்ற கேடி லேடி சிக்குவாரா?

