குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.16 லட்சம் கொடுத்து எம்பிபிஎஸ் பட்டத்தை பெற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக் கழகம், பணத்தைப் பெற்றுக்கொண்டு போலியான ஹோமியோபதி மருத்துவ சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள போலி சான்றிதழ் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் மீது 5 ஆண்டுகள் கழித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவ இடங்களை நிரப்புவதில் பல்வேறு குளறுபடிகளும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளும் நீடித்து வரும் நிலையில், குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.16.32 லட்சம் பெற்றுக்கொண்டு, உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்ஸியில் உள்ள புந்தேல்கண்ட் பல்கலைக் கழகம் போலி மருத்துவ சான்றிதழை வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணத்தை செலுத்திய ஒரு மாதத்தில் வகுப்புகளுக்குச் செல்லாமல், எந்தவொரு தேர்வும் எழுதாமல், பயிற்சி இல்லாமல் மருத்துவ சான்றிதழை வழங்கியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு சுரேஷ் பாட்டீல் (41) என்பவர், மருத்துவம் சார்ந்த உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அகில இந்திய மாற்று மருத்துவ கவுன்சில் சார்பாக எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான சான்றிதழ் வழங்குவது தெரியவந்துள்ளது. இது குறித்து அதில் வழங்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணில் மருத்துவர் பிரேம்குமார் ராஜ்புத் என்பவரையும் தொடர்புகொண்டுள்ளார்.
அதில் அவர், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் எம்பிபிஎஸ் முடித்த சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் முறைப்படியே நடத்தப்படுவதாக உறுதி அளித்து பாட்டீலை நம்பவைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆரம்பகட்டமாக ரூ.50,000 செலுத்தியுள்ளார். அதன் பிறகே ஜான்ஸியிலுள்ள புந்தேல்கண்ட் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

