டேராடூன்: ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவருக்கு நர்சிங் அதிகாரி ‛செக்ஸ்’ டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதுபற்றிய புகார் கிடைத்த நிலையில் போலீசார் போலிரோ வாகனத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வார்டுக்குள் சென்று நர்சிங் அதிகாரியை தூக்கிய வீடியோ வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சதீஷ் குமார் என்பவர் நர்சிங் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் இந்த மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் சதீஷ் குமார், பெண் டாக்டருக்கு ‛செக்ஸ் டார்ச்சர்’ கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது சதீஷ் குமாருக்கு அந்த பெண் டாக்டருக்கு அவ்வப்போது செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த 19ம் தேதி மருத்துவமனையின் அறுவை சிகிச்சைக்கான யூனிட்டில் வைத்து அவர், இளம்பெண் டாக்டரிடம் தவறாக நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு பெண் டாக்டர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சதீஷ் குமார் அவரை விட்டுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் பெண் டாக்டரின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பிய சதீஷ் குமார், தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமையால் பெண் டாக்டர் மனம் உடைந்து போனார். இதபற்றி
அவர் உடனடியாக முதலில் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகாரளித்தார். மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையின்போது சதீஷ் குமார் மீது குற்றம் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கிடையே தான் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் போலீசிலும் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமாரை அதிரடியாக கைது செய்தனர். இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் போலீசார் சதீஷ் குமாரை கைது செய்ய பின்பற்றிய நடைமுறை தான்.
அதாவது போலீசார் கைது செய்ய வந்தபோது சதீஷ் குமார் எய்ம்ஸ் மருத்துவமனையின் பொதுப்பிரிவில் பணியில் இருந்தார். இதையடுத்து சினிமா பாணியில் மருத்துவமனையின் பொது வார்டுக்குள்ளேயே போலிரோ போலீஸ் வாகனத்தை போலீசார் ஓட்டி சென்றனர். மருத்துவமனையின் ரேம்ப் பாதை வழியாகவும் போலீஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு சதீஷ் குமாரை போலீசார் கைது செய்து காரில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

