Last Updated:
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் பேரணி நடத்தவுள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், வாக்குத் திருட்டைக் கண்டித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை (6ஆம் தேதி) நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஆணையத்தில் இருக்கும் மற்ற இரண்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல் தனிச்சையாக முடிவுகளை எடுத்ததாகவும், எஸ்.ஐ.ஆர். விவகாரங்களில் தனிச்சையாக செயல்பട്ടதாகவும், ஆணையத்தில் இருக்கும் மற்ற இரண்டு அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துவருகின்றன. காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை டெல்லியில் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான பல மனுக்களும் உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்துவருகின்றன. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது அதிகாரங்களைப் பயன்படுத்திய விதம் மற்றும் சர்ச்சைக்குரிய ‘படிவம் 6’ மாற்றம் உள்ளிட்டவை குறித்துத் தொடரப்பட்ட வழக்குகளில், சம்பந்தப்பட்ட முடிவுகள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், வாக்குத் திருட்டைக் கண்டித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை (6ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி சென்று, ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பேரணியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


