கோலாலம்பூர்:
மக்களின் விருப்பத்திற்கு இணங்க, வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி யாருடனும் கைகோர்க்காமல், அங்குள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் (Menteri Besar) டத்தோ ஒன் ஹஃபீஸ் காசி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘கெலுவார் செகெஜாப்’ (Keluar Sekejap) எனும் அரசியல் பாட்காஸ்ட் (Podcast) நிகழ்ச்சியின் 200-வது நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.
“ஜோகூர் மக்கள் நாங்கள் தனித்துப் போட்டியிட மாட்டோமோ என்று கவலைப்பட்டனர். மக்களின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் நாங்கள் தெளிவாகக் கேட்டுள்ளோம். மக்களுக்குச் செவிசாய்க்கும் ஒரு அரசாங்கமாக, அவர்களின் விருப்பத்தை நாங்கள் செயலில் காட்ட வேண்டும். அதனால்தான் 56 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்,” என்று ஒன் ஹஃபீஸ் கூறினார்.
ஜோகூர் அம்னோ (Umno) லியாசோன் கமிட்டியின் தலைவராகவும் இருக்கும் ஒன் ஹஃபீஸ் மேலும் கூறுகையில், ஜோகூரில் BN தனித்துச் செயல்படுவது ஒன்றும் புதிய விஷயமல்ல என்று சுட்டிக்காட்டினார். ஜோகூர் எப்போதும் 100 விழுக்காடு BN நிர்வாகத்தின் கீழ்தான் இருந்துள்ளது என்றும், பக்காத்தான் ஹரப்பான் (PH) கட்சியுடன் இணைந்து அங்கு இதுவரை அரசாங்கம் அமைத்தது இல்லை என்றும் அவர் கூறினார்.
ஜோகூர் மாநிலத்தைப் பொறுத்தவரை பெரிகாத்தான் நேஷனல் (PN) மற்றும் பக்காத்தான் ஹரப்பான் (PH) ஆகிய இரு கூட்டணிகளுமே எதிர்க்கட்சிகள்தான். எனவே, அனைத்து இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவது தங்களுக்குப் புதியதல்ல என்று அவர் குறிப்பிடினார்.
தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது மாநிலத்தின் உரிமை சார்ந்த முடிவு என்றாலும், புத்ராஜெயாவில் உள்ள மத்திய அரசுடனான தங்களின் நிர்வாக உறவு எப்போதும் போல் பலமாகவே இருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பது என்பது முற்றிலும் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் ஜோகூர் இளவரசர் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் ஆகியோரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. தமக்கு அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் மாதம் வரை அவகாசம் உள்ளதாகவும், அதற்கு முன்பாகத் தாம் எந்த முடிவையும் முன்கூட்டியே அறிவிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது அடிமட்ட அளவில் மக்களுக்கு உண்மையாகச் சேவை செய்யக்கூடிய தகுதியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் முதலமைச்சர் ஒன் ஹஃபீஸ் காசி தெரிவித்தார்.




